மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க இரண்டு லட்சம் சிறப்பு போலீஸ்

பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க இரண்டு லட்சம் சிறப்பு போலீஸ்

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசம் முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில், இரண்டு லட்ச மாணவிகளை ’சிறந்த போலீஸ் அதிகாரிகள்’ என நியமிக்க உத்திரப்பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் கல்வியறிவு இல்லாத மற்றும் நலிந்த பெண்களை ஊக்குவிக்கும்வகையில் ’1090’ பெண்கள் சக்தி வரிசை (Women Power Line) என்ற பெயரில் ஒரு திட்டம் அமலாக உள்ளது.

இத்திட்டத்தின் மூலம், பெண்களை மேம்படுத்தவும் அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாநிலத்திலுள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினரைச் சேர்ந்த பெண்களுக்கு உதவுவது இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவிகள் சிறந்த போலீஸ் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிற மாணவிகள் படித்துக்கொண்டே தங்களுடைய பணிகளைச் செய்வார்கள். இவர்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைக் களைவதே முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பார்கள். மேலும் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்கள் குறித்து அருகிலுள்ள போலீஸூக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதன்பிறகு, பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் சட்டரீதியான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்வார்கள்.

உத்திரப்பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி நடக்கிறது. அந்த அரசின் இந்த முடிவு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. லக்னோவில் இன்று நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதற்கட்டமாக 25 மாணவிகள் சிறந்த போலீஸ் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கான சான்றிதழ்களை உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ்சிங் வழங்க உள்ளார். இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பயின்று வருகிற மாணவிகளில் 2 லட்சம் பேர் இந்தப் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

இத்திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உத்திரப்பிரதேசத்தில் வரும் 2017இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இவ்வாறான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon