மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

இரண்டு மாதங்களில் மூன்று புலிகள் உயிரிழப்பு!

இரண்டு மாதங்களில் மூன்று புலிகள் உயிரிழப்பு!

இந்தியாவில் இந்த ஆண்டில் புலிகளின் இறப்பு அதிகரித்துள்ளது. மும்பையின் சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் இருந்த பலாஷ் என்ற புலி சிறுநீரக செயல் இழப்பு காரணமாக 13 வயதில் இறந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உலகிலேயே அதிக வயதான புலி என்ற பெருமையைப் பெற்ற மச்சிலிப் புலி உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தது. மச்சிலி, பலாஷைத் தொடர்ந்து தற்போது கேரளாவில் வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த துர்கா என்ற ஏழு வயதுப் பெண் புலி இறந்துள்ளது. இது, இந்த ஆண்டில் இறந்த புலிகளின் எண்ணிக்கையில் 1௦௦வது புலி ஆகும்.

இதுகுறித்து வயநாடு வனவிலங்கு சரணாலய அதிகாரி தானேஷ் குமார் கூறியதாவது: கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று அந்தப் புலியை ஒரு காட்டுப் பகுதியில் பார்த்தோம். அப்போது புலி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. அதோடு, கால்நடைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 9ஆம் தேதி புலியை வனவிலங்கு சரணாலயத்துக்கு கொண்டு வந்தோம். 9ஆம் தேதி துர்காஷ்டமி அன்று கொண்டுவந்ததால் அதற்கு துர்கா எனப் பெயர் வைத்தோம். துர்கா மற்ற விலங்குகளோடு சண்டையிட்டபோது அதன் முன்னங்காலில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கு சிகிச்சை அளித்தபோது துர்கா உயிரிழந்தது என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 1௦௦ புலிகள் இறந்துள்ளன என இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 91 புலிகள் இறந்தநிலையில், இந்த ஆண்டு இதுவரை 100 புலிகள் இறந்துள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon