மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

ஓ.பி.எஸ்.நியமனம் சரியா? புதிய மனுவால் சிக்கல்!

ஓ.பி.எஸ்.நியமனம் சரியா? புதிய மனுவால் சிக்கல்!

‘முதலமைச்சரின் கையெழுத்தோ, நேரடிப் பரிந்துரையோ இல்லாமல் யாருக்கும் அவரது இலாகாக்களை ஒதுக்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதனால் மாநிலத்தின் நிர்வாகம் கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து உண்டு.’ இப்படி, ஒரு மனுவை பெரியார் வழக்கறிஞர் பேரவைத் தலைவர் எஸ்.துரைசாமி கவனர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்க்க மருத்துவமனை வரும் அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் யாரும் இதுவரை அவரை சந்தித்ததாகச் சொல்லவில்லை. இருந்தாலும் அவர் நிர்வகித்து வந்த அனைத்து இலாகாக்களும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கூடவே, அமைச்சரவைக் கூட்டத்துக்கும் அவரே தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக கோட்டைக்கு வந்து அவர் தனது பணிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், பெரியார் வழக்கறிஞர் பேரவை சார்பில் அதன் தலைவர் துரைசாமி, கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், ‘கவர்னர் மருத்துவமனைக்கு நேரில் சென்றும் முதல்வரைப் பார்க்க முடியவில்லை. முதல்வரின் வாய்மொழி உத்தரவு, ஆலோசனைப்படி ஓ.பி.எஸ்-ஸுக்கு இலாகாக்களை மாற்றிக் கொடுத்ததாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை. முதல்வரின் இலாகாக்களை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுப்பது அரசியல் சட்டம் பிரிவு 164ன் படி தவறு. எதிரானது. அரசு நிர்வாகத்தை நடத்தும்பொருட்டு மாநிலத்தின் தலைமைச் செயலாளரை நேரடியாக அழைத்து விவாதிக்கவும் முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. இப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானவகையில் ஒரு மாநிலத்தின் ஆட்சியை நடத்துவது தவறு” என, ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் துரைசாமி.

ஏற்கனவே, ஆட்சிக்கு எதிரான விமரிசனங்கள் அன்றாடம் வேகமெடுத்துவரும் நிலையில் இந்த மனு புதிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon