மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

திண்டுக்கல்: சந்தையில் ஆடுகள் விலை வீழ்ச்சி!

திண்டுக்கல்: சந்தையில் ஆடுகள் விலை வீழ்ச்சி!

தீபாவளி நெருங்கும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர் சந்தையில் ஆடுகளின் விலை வீழ்ச்சி அடைந்ததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் வடமதுரை, அய்யலூர், கடவூர், எரியோடு, காணப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு மற்றும் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலேயே அய்யலூர் சந்தையில் தான் அதிகளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் அய்யலூர் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம் ஆகும்.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால், இந்துக்கள் பெரும்பாலும் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இதனால் அய்யலூர் சந்தையில் வெளி மாவட்ட வியாபாரிகளின் வருகை வழக்கத்தைவிட நேற்று குறைவாகவே இருந்தது. இதனால் அய்யலூர் சந்தையில் ஆடுகள் விற்பனையும் மந்தமானது. வழக்கமாக காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை ஆட்டுச்சந்தை நடைபெறும். ஆனால் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய சந்தை காலை 10 மணிக்கே முடிந்துவிட்டது. வியாபாரிகளின் கூட்டம் குறைவாக இருந்ததால், ஆடுகளின் விலை வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரத்தில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. ஆனால் நேற்று 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.2 ஆயிரத்து 500–க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். தாங்கள் கொண்டு வந்த ஆடுகளை திரும்ப கொண்டு சென்றனர். மேலும் அடுத்த வாரத்தில் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கிவிடும், தீபாவளி பண்டிகை நெருங்கும் என்பதால் வரும் வாரங்களில் ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon