மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

தமிழகத்துக்கு புதிய பெண் கவர்னர்?

தமிழகத்துக்கு புதிய பெண் கவர்னர்?

தமிழகத்தில் தற்போது வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வருகிறார். முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவுக்குப் பிறகு, மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ், கடந்த மாதம் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். இதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உண்டு.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, தமிழகத்தின் பொது நிர்வாகத்தில் சுணக்கம். மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலத்தின் கவர்னராக இருப்பவர் தமிழகத்தையும் சேர்த்து கவனிப்பது சற்று சிரமமான காரியம். பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தேவையற்ற தாமதம் ஏற்படும். அதைத் தவிர்ப்பது அவசியம். இந்த எண்ணம் மத்திய அரசுக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் தமிழகத்துக்கு முழுநேர கவர்னரை நியமிக்க திட்டமிட்டு வருகிறது. தற்போதைய மணிப்பூர் மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா, முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறதாம். இவர்களில் நஜ்மா ஹெப்துல்லா சுதந்திரப் போராட்ட வீரர் அபுல்கலாம் ஆசாத்தின் பேத்தி. முதல்வர் ஜெ.வுக்கு நன்கு அறிமுகமானவர். ஆனந்திபென் பட்டேல் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? ஏற்கனவே இவர்கள் இருவரையும் தமிழக கவர்னர்களாக நியமிக்க மத்திய அரசு ஆர்வம் கொண்டிருந்ததுதான். ஆனால் அப்போதைய கவர்னர் ரோசய்யாவை மாற்ற ஜெ. எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த எண்ணத்தை மத்திய அரசு கைவிட்டது. ஆனால் இப்போது இவர்கள் இருவரில் ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டிருக்கிறதாம். இதற்கிடையே, வித்யாசாகர் ராவையே நிரந்தர கவர்னராக நியமிக்கும் திட்டமும் இருக்கிறதாம். அதற்கேற்றாற்போல் அவரும் தஞ்சை, திருச்சி மாவட்ட கூட்டங்களில் கலந்துகொண்டு காவிரிப் பிரச்னை, திருக்குறளை தேசிய அளவில் கொண்டுசெல்வது பற்றியெல்லாம் அக்கறையாகப் பேசி அசத்தியிருக்கிறார். இது ஒருபுறமிருக்க, ஒருவேளை ஒருசில மாநில பாஜக கவர்னர்களைப்போல் நிரந்தரமாக இங்கே நியமிக்கப்பட்டால் தமிழகத்தின் நிர்வாகத்தில் தலையிடுவாரோ என்ற பயம் ஆளுங்கட்சி வட்டாரத்தை ஆட்டிப் படைக்கிறதாம். காரணம், ஆட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்களின் சில கோரிக்கைகளை அவர் ஆரம்பத்திலேயே நிராகரித்ததுதானாம்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon