மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

உறவினர்களுக்கு வேலைவாய்ப்பு: கேரள அமைச்சர் ராஜினாமா!

உறவினர்களுக்கு வேலைவாய்ப்பு: கேரள அமைச்சர் ராஜினாமா!

கேரள தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன்மீது உறவினர்களுக்கு வேலை வழங்க சலுகை காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர், தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் இ.பி.ஜெயராஜன். இவர், தனது உறவினர்களுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பொது மேலாளர் பதவி உட்பட உயர் பதவிகள் வழங்கியதாக புகார் எழுந்தது.

இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அமைச்சர் ஜெயராஜனை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இது தொடர்பாக, அமைச்சர் ஜெயராஜனுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திருவனந்தபுரம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக நாளைக்குள் (இன்று) அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநர் ஜேக்கப் தாமசிற்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அமைச்சர் ஜெயராஜன்மீது துரித விசாரணைக்கு ஜேக்கப் தாமஸ் உத்தரவிட்டுள்ளார்.

உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க சலுகை காட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள விவகாரத்தில் அமைச்சர் ஜெயராஜன் ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, மார்க்சிஸ்ட் செயலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. ஜெயராஜன் தொடர்ந்து அமைச்சரவையில் இருக்கக் கூடாது என்ற கருத்து அப்போது முன்மொழியப்பட்டது. ஜெயராஜன் 4 மாதங்கள் மட்டுமே இந்த அமைச்சரவையில் பதவி வகித்துவந்துள்ளார்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon