மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

ஜெயலலிதாவை ஏன் உங்களுக்கு பிடிக்கும்?

ஜெயலலிதாவை ஏன் உங்களுக்கு பிடிக்கும்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. அவரது உடல்நிலை பலரை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, பெண்கள் பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதா என்ற ஆளுமையை உங்களுக்கு ஏன் பிடிக்கும் என மூன்று தலைமுறை பெண்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அளித்த பதில் இதோ…

கு.ஜோதி (50) இல்லத்தரசி

எனக்கு அவரை முதலில் ஒரு நடிகையாக மிகவும் பிடிக்கும். அவரும் எம்.ஜி.ஆர். அவர்களும் இணைந்து நடித்த படங்களைப் பார்ப்பதற்காக நானும் என் தங்கையும் வீட்டுக்குத் தெரியாமல் காசு சேர்த்து வைப்போம். அவரின் உடை அலங்காரம் எங்களை மிகவும் ஈர்த்தது. அவரைப் போல் நானும் அலங்காரம் செய்து கொள்ள முயற்சிப்பேன். பின்னர் அவர் தமிழக முதலமைச்சராக பதவியேற்றபோது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர் பெண்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் கொண்டு வந்த திட்டங்களில் பயனடைந்தவர்கள் பலர். அதில் நானும் ஒருத்தி. என் மகள் திருமணத்துக்காக 4 கிராம் தங்கம், ரூபாய் 50,000 உதவித் தொகை ஆகியவற்றை பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு, மழை வெள்ளம் ஏற்பட்டபோதும் உதவித் தொகை பெற்றேன். இதுபோல் பெண்களுக்காக அவர் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். அவரால் பயனடைந்தோர் ஏராளம். அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து ஆட்சியைத் தொடர கடவுளிடம் பிராத்திக்கிறேன்.

ஆ.வசந்தி (45), டெய்லர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் திறமை மிகவும் பிடிக்கும். அவர் கொண்டுவந்த திட்டங்களில் ‘அம்மா உணவகம்’ என்னை மிகவும் கவர்ந்தது. அம்மா உணவகத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பல மக்கள் ஒரே இடத்தில் உண்பதை பார்த்திருக்கிறேன். உணவின் தரத்தை அறிந்துகொள்ள பலமுறை அங்கு சென்று சாப்பிட்டுள்ளேன். இந்த இலவச திட்டங்களை எல்லாம் தாண்டி, நான்கு ஆண்கள் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு இணையாக வேலை செய்வதே எனக்கு கடினமாகத் தோன்றும். எப்படி இவர் தமிழகத்தையே ஆள்கிறார் என அவருடைய நிர்வாகத் திறனைப் பார்த்து பல முறை ஆச்சர்யப்பட்டுள்ளேன். எந்த பிரச்னைக்கும் கலங்காமல் தைரியமாக இருக்கிறார். அரசியலில் பெண்கள் நுழைவதே சர்ச்சையாகவும் கடினமாகவும் இருக்கும் நிலையில், அரசியலில் ஜெயித்துக் காட்டியிருக்கிறார். இதனால், பல பெண்களுக்கு முன்னோடியாக இருக்கிறார். சினிமாவிலும் அரசியலிலும் அவருக்கு இணையாக அவரே உள்ளார். அவர் உடல்நலம் குணமடைந்து மீண்டும் அதே கம்பீரத்துடன் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

சி.கீதா (23) பி.காம் பட்டதாரி

தமிழக முதலமைச்சரின் கம்பீரம் எனக்குப் பிடிக்கும். அவருடைய தன்னம்பிக்கையும் தைரியமும் மாணவிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயம். அவர் இலவச நாப்கின் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். பெண்ணாக இருப்பதால் இதனுடைய முக்கியத்துவம் எனக்கு அதிகமாக புரிந்தது. கல்லூரியில் படிக்கும்போது இலவச லேப்டாப் கொடுத்தார். அதை இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், என்னுடைய அப்பா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டது. பின்னர். அடிபட்ட சில நாட்களில் அப்பாவுக்கு செல்பேசி மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து அரசு மூலம் ரூபாய் 5,000 நிதியுதவி கிடைத்தது. மேலும் மருத்துவக் காப்பீடு, பிரசவ விடுமுறை போன்ற அத்தியாவசியமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். பெண்ணாக இருப்பதால் பெண்களுக்குப் பயனுள்ள பல திட்டங்களை அவர்களால் செய்ய முடிகிறது. மேலும், அவர் ஆட்சியில் இருக்கும்போது ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. அவர் உடல்நலம் குணமாக நானும் என் நண்பர்களும் கடவுளைப் பிரார்த்தனை செய்கிறோம்.

கோ.காஞ்சனா (19) கல்லூரி மாணவி

முதல்வர் மாணவர்களுக்காக நிறைய திட்டங்கள் கொண்டு வந்துருக்காங்க. வீட்டில் லேப்டாப் கேட்டக் கூட வாங்கி தரமாட்டாங்க. ஆனால், அவங்க படிக்க எளிதாக இருக்கும் வகையில் லேப்டாப் குடுத்துருக்காங்க. பள்ளியில் படிக்கும்போது சைக்கிள் கொடுத்தாங்க. அது மட்டுமில்லாம… மிக்சி, கிரைண்டர், ஃபேன் போன்ற வீட்டுக்குத் தேவையான பொருட்களை கொடுத்தாங்க. இது என் அம்மாவுக்கு ரொம்ப உதவியா இருக்குது. மழை வெள்ளம் அப்போ எங்க வீடு எல்லாம் மூழ்கிடுச்சு. மொட்டை மாடியில்தான் இருந்தோம். அதன் பிறகு வெள்ள நிவாரணமா ரூபாய் 5,000 குடுத்தாங்க. எங்களுக்கு தேவையான எல்லாமே அவங்க கொடுத்துருக்காங்க. அதனால், அவங்கள எனக்கு பிடிக்கும். அதை விட முக்கியமா அவங்க துணிச்சலும் தன்னம்பிக்கையும் ரொம்பப் பிடிக்கும். அவங்க தன்னம்பிக்கையே அவங்களைச் சீக்கிரமா ஆஸ்பத்திரியிலிருந்து குணமாகி வரவழைக்கும்.

பூங்கொடி,

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon