மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 3 ஜுன் 2020

படைப்பாளியின் சுதந்திரமா? சமூக நலனா? - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி!

படைப்பாளியின் சுதந்திரமா? சமூக நலனா? - லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி!

ஆண் - பெண் பேதம் பார்க்காத சமத்துவ மொழி சினிமா. ஆனால், அந்தச் சினிமாவை உருவாக்குவதென்பது தமிழ் சூழலில் ஆணை சார்ந்தும், ஆணைச் சுற்றியும், ஆண்களாலுமே உருவாக்கப்படுவதாக உள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண்களின் பங்களிப்பு உள்ளன. அந்தவகையில் தமக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு, தமக்கான இடத்தை உறுதி செய்துகொண்ட விதிவிலக்கு இயக்குநர் 'லட்சுமி ராமகிருஷ்ணன்'. ஆண் படைப்பாளிகள் நிறைந்த திரையுலகில், ஆழ்கடலைக் கடக்கும் பாய்மரக் கப்பலின் போராட்டப் பயணமாக எதிர்நீச்சல் போட்டு முன்னேறிச் செல்லும் படைப்பாளி. ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்துக்குப் பிறகு அந்த வரிசையில் இந்த வெள்ளியன்று இணைகிறது ‘அம்மணி’. காஸ்டிங், சூட்டிங் பரபரப்பு முடிந்து படம் வெளியிடும் பரபரப்பில் இருந்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் சொல்லி நமக்கான பேட்டியைத் தொகுத்தோம்.

85 வயது பாட்டியின் வாழ்க்கையை கதைக் கருவா எடுக்கக் காரணமென்ன?

நிஜ வாழ்க்கையில் ஒரு 85 வயது பாட்டியை என்னுடைய ஷோ-வில் பார்த்தேன். அவங்களைப் பார்த்து இன்ஸ்பைர் ஆனேன். அவர்களுடன் எனக்கு கிடைச்ச அந்த அனுபவங்களை மற்றவங்களுக்கு பகிர்ந்துக்கணும்னு நினச்சேன். அதுதான் ‘அம்மணி’யாக வெளி வருகிறது.

மூன்று படங்களுமே பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கீங்க?

நான் ஒரு பெண்ணாக இருப்பதால் ஒரு பெண்ணோட கோணத்தில் இருந்து படம் சொல்றது எளிதல்லவா! ஒரு இருநூறு படங்கள் ரிலீஸ் ஆகுதுன்னா… அதுல நாலு படங்கள்தான் பெண் இயக்குனர்களால் வார்க்கப்படுகிறது. திரைக்கும் வருகிறது. மற்ற எல்லாமே ஆணோட கோணத்தில் இருந்துதான் வருது. அந்த காலத்துல கே.பி. சார், பாலு மகேந்திரா சார் எக்ஸ்ட்ராடினரியா பெண் கோணத்துல கதை சொன்னாங்க. இன்னைக்கு அப்படி கதை சொல்லும் ஆண் இயக்குநர்கள் குறைஞ்சிருக்காங்க. ஆக… இன்னைக்கு என்னுடைய கோணத்துல நான் சொல்றேன். நான் பெண்ணியவாதி இல்லை. என்னை பெண்ணியவாதியா எப்போதும் நான் அடையாளப்படுத்திக் கொண்டதும் இல்லை. ‘அம்மணி’ கூட ஒரு யுனிவர்சல் ஸ்டோரிதான். அதேநேரம் ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு பரிட்சயமான விஷயத்தைப் பேசுறேன். அது என்னோடு நெருக்கமாக இருப்பதால் வெளிப்படுத்தவும் எளிமையா இருக்கு. ஒரு பெண்ணோட கோணத்துல இந்த சமூகத்துக்கு பல விஷயம் தெரியவேண்டியும் இருக்கு. அதையே நான் தொடர்ந்து வெளிப்படுத்துறேன்.

சமீபமாக நடந்துவரும் பெண்கள் மீதான தாக்குதல் - ஒடுக்குமுறை - படுகொலைகள். ஒரு பெண்ணாகவும், படைப்பாளியாகவும் இதை எப்படி பார்க்கறீங்க?

முப்பது வருஷம் முன்னாடி இருந்ததைவிட பெண்கள் ஓரளவு தற்போது முன்னேறியிருக்காங்க. உண்மைதான். அதேகணம், மறுபக்கம் பெண்களுக்கான மரியாதை குறைஞ்சிருக்கு. என்னுடைய பாட்டி மூன்றாவது படிச்சவங்க. தாத்தா பெரிய லாயர். ஆனா, ஒவ்வொரு வழக்கையும் என் பாட்டிகிட்ட டிஸ்கஸ் பண்ணுவாரு, பேசுவாரு. அந்தளவு அப்போது மரியாதை இருந்தது. ஆனால், இன்று கால ஓட்டத்தில் பெண்கள் மீதான மரியாதை குறைந்து பெண்களைப் பொருளாகப் பார்க்கிற கண்ணோட்டம் அதிகமாகிடுச்சு. அன்றைய காலத்திலும் இது இருந்தது. பெண்ணைத் தானமா கொடுப்பது, சபையில ஆணை மகிழ்விக்க டான்ஸ் ஆட வைப்பது போன்றவை இருந்தது. ஆனாலும், இன்று அது பெருகியிருக்கு. பெண்ணை போகப்பொருளாக அணுகும் போக்கு அசகாயளவில் பெருகியிருக்கு. அதற்கு மீடியாவுக்கும், சினிமாவுக்கும் பெரும் பங்கு இருக்கு. பள்ளிக்குப் போற பெண்ணைக் காதலிப்பது, துரத்தித் துரத்திக் காதலிப்பதாக டார்ச்சர் செய்வது, அதை நியாயப்படுத்துவது, ஒரு பையனை பெண் ரிஜக்ட் செய்தால், அந்த பையன் பெரிய அவமானத்துக்குள்ளாவது போன்ற உணர்வைக் கொடுப்பது என சினிமா காதலை மிகைப்படுத்தி காட்டுகிறது. அதனுடைய விளைவுகளைத் தான் நாம் இப்போ அனுபவச்சிக்கிட்டு இருக்கிறதா நான் நினைக்கிறேன். ஸ்கிரீன்ல நாம் நல்ல ரோல் மாடல்களைக் கொடுக்கணும். சமூக பொறுப்பு நமக்கு இருக்கணும். சினிமாவைப் பொழுதுபோக்கு விஷயம் என்கிறார்கள். அப்படி மட்டுமே பார்க்கப்பட்டால் எப்படி இத்தனை முதல்வர்கள் வந்திருப்பார்கள்? சினிமா பண்பாட்டோடு கலந்த ஒன்றா பார்க்குறாங்க. அப்படியிருக்க, அதை நாம சரியா பயன்படுத்திக்கலைன்னா அது வேறு வகையில் விளைவுகளையும் ஆபத்துகளையும் கொடுக்கும். அதைதான் தற்போது நாம அனுபவச்சிக்கிட்டு இருக்கோம். ஒரு படைப்பாளியோட சுதந்திரத்தை விட, சமுதாயத்தோட நலன்தான் முக்கியம் என்று பர்சனலா நான் நினைக்கிறேன்.

சமீபமாக சினிமாவில் சில வெற்றிகரமான இளம் நடிகர்கள் பெண்ணை துரத்தித் துரத்திக் காதலிப்பதையும், கட்டாயப்படுத்தி விரும்புற வகையான படங்களையே விரும்பி நடிக்கிறார்கள். இதை எப்படி பார்க்கறீங்க?

தனி மனிதனுடைய பலனுக்காக ஒரு சமுதாயத்தோட நலனை பார்க்காம இருக்கிறது மிகப் பெரிய தப்பா நான் பார்க்குறேன். நம் நாட்டில் சினிமாவை உதாரணமா பார்க்குறாங்க. நம் பக்குவம் அந்தளவில்தான் உள்ளது. இதை நாம புரிஞ்சுக்கணும். ரசிகர்களைச் சினிமா பாதிக்குது. அப்படியிருக்க, அவர்களிடம் தவறானதை வலியுறுத்தக்கூடாது. ஒரு ஆண் காதலை, பெண் மறுக்கிறார் என்றால் அவரைவிட பெட்டரான வேற பெண் கிடைக்கும் என்பதாக படமிருக்கணும். அப்படிதான் நாம சொல்லி தரணும். அதைவிட்டுக் கட்டாயப்படுத்தி காதலிப்பது போன்றவை அவனை தவறா வழிநடத்துவதா இருக்கு. நம்ம இளைஞர்களை முட்டாளாக்கி வர்றாங்க. பல அரியர்ஸ் வச்சு, அப்பாவை கண்டமாதிரி திட்டி, ஒப்பன் தி பாட்டில்னு சொல்லி, பொண்ணுங்க பின்னாடி சுத்திகிட்டு இருந்தா நீ பெரிய ஹீரோன்னு சொல்லி அவனுக்குத் தப்பான வழிகாட்டலை தர்றாங்க. இளைஞர்களின் லைஃப்பை கெடுக்குறாங்க. ‘நீ உறுதியா இலக்கோடு பயணி’ என்று ரோல் மாடல் படங்களைத் தருவதில்லை. அதுமாதிரியான ஹீரோக்களை ஏன் இயக்குநர்கள் படைப்பதில்லை? செருப்பு தைப்பவர் மகனும் பட்டதாரியாகி, சுய பலத்தோடு வாழும் நம்பிக்கையை உருவாக்கணும். அப்படிப்பட்ட படங்களை எடுப்பதுதான் ரியல் ஹீரோயிஸம். இளைஞர்கள் வாழ்வில் சின்னச் சின்ன குறும்புகள் இருக்கலாம். விளையாட்டுத்தனங்கள் இருக்கலாம். ஆனா, அது மிகைப்படுத்தப்பட்டு பெண்ணைச் சிதைக்கும், மோசமானதாக இருக்கக்கூடாது. உலகளவில் இளைஞர்கள் எவ்வளவோ சாதிக்க வேண்டி இருக்கு. நிறைய டேலண்ட்ஸ் அவங்ககிட்ட இருக்கு. அவர்களை நாம் ஆக்கப்பூர்வமா பயன்படுத்திக்கணும். வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்படும்விதமா இளைஞர்கள் சக்தியை நாம் பயன்படுத்திக்காமல் தப்பான விஷயத்தில் வழிகாட்டி அவனின் இளமையை மட்டம் தட்டிக்கொண்டு இருக்கிறோம்.

அப்பா, அம்மாவிடமிருந்து பிரித்து தனிக்குடித்தனம் போக விரும்பும் மனைவியை, கணவன் விவாகரத்து செய்யலாம் என சமீபத்தில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் உங்கள் கண்ணோட்டம் என்ன?

ஓர் ஒழுங்குமுறை இருக்கணும் என்ற காரணத்துக்கான ஒரு சிஸ்டமா அந்தக் காலத்தில் இம்முறையை வச்சாங்க. ஆனா, இன்னைக்கு லைஃப் ஸ்டைல் மாறிடுச்சு. ஒரு பையனும், பெண்ணும் கல்யாணம் செஞ்சுகுறாங்கன்னா… அது இருவரின் இணைவு மட்டுமல்ல. இரு குடும்பங்களின் ஒருங்கிணைவும் கூட... அது ஒரு யூனியன். பொண்ணு எப்படி பையனின் அப்பா, அம்மாவைத் தன்னுடைய பெற்றோரா பார்க்கிறாரோ… அதேபோல பையனும் பெண்ணின் அப்பா, அம்மாவை தன்னுடைய பெற்றோரா பார்க்கணும். அதுதான் சமத்துவம். இதை எத்தனை ஆண்கள் பார்க்குறாங்கன்னு யோசிச்சு பாருங்க. பொண்ணு தன்னுடைய அப்பா, அம்மாவை விட்டு மாமியார் வீட்டுக்கு வந்தா அது டிரெடிஷன்… பையன் தன்னுடைய அப்பா, அம்மாவை விட்டு வந்தா, அது எப்படி கிரைம் ஆகும்?

மூன்று படங்கள் இயக்கியிருக்கீங்க. குறிப்பாக ‘அம்மணி’யில் உங்கள் அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்ன?

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் நிறைய குடும்பங்களை சந்திச்சிருக்கேன். அது எனக்கு பெரிய அனுபவம் கொடுத்திருக்கு. அந்த அனுபவங்களின் முக்கியமான தொகுப்பாகவும் ‘அம்மணி’யைப் பார்க்கலாம். ‘அம்மணி’யில் என்னுடைய டிராவல் நிறைய கற்று கொடுத்திருக்கு. பெண்களின் பயணத்தைப் பெண்ணின் பார்வையில் கொடுத்திருக்கேன். இந்த பயணத்தில் தமிழகக் குடும்பங்களும் பங்கேற்று வெற்றியை கொடுக்க வேண்டும் - என்கிறார் இந்த மாற்று சினிமா ‘அரசியல் அம்மணி’.

- சே.த.இளங்கோவன்

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon