மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

இன்று, உலக முட்டை தினம்!

இன்று, உலக முட்டை தினம்!

முட்டையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் முட்டை சாப்பிடுவது சரியா என்ற தயக்கம் சிலருக்கு இருக்கும். ஆனால், தினமும் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின், இரும்புச்சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான, சரி விகித உணவாக மாற்றுகிறது.

வைட்டமின் ஏ, பி, சி, டி, இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் முட்டையில் உண்டு. மேலும், தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. தசைகளின் வலிமைக்கு புரதம் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே ‘பாடி பில்டிங்’ பயிற்சியை மேற்கொள்பவர்கள் அடுக்கடுக்காக முட்டைகளை பச்சையாகவே உடைத்துக் குடிப்பது வழக்கம்.

பொதுவாக, முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் வரை சாப்பிடலாம். மஞ்சள் கருவைச் சாப்பிடுவதாக இருந்தால் தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும். இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தூங்கப்போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். இதில், பிராய்லர் கோழி முட்டையை அதிகமாக எடுத்துக் கொள்வதைவிட நாட்டுக் கோழி முட்டையை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பிராய்லர் கோழி முட்டையை சாப்பிடுவதன் மூலம் மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகள் ஏற்படக்கூடும். எனவே, இதை உணவில் குறைத்துக்கொள்வது சிறந்தது.

பூப்பெய்திய பெண்களும், பிள்ளை பெற்றவர்களும், வாய் புண் இருப்பவர்களும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இது தவிர வாத்து முட்டைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது சாப்பிடுவதனால் குழந்தைகளின் சளித் தொல்லை, ஆஸ்துமா, அதிகப்படியான உடல் வெப்பம் போன்ற நோய்கள் குணமாகும். கேரளா உணவுப் பொருள்களில் தமிழக வாத்து முட்டைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அம்மாநில வியாபாரிகள் முன்பணம் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். தமிழகத்தில் முட்டை அதிகமாக உற்பத்தியாகும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon