மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

முதியோர் உதவித்தொகை: புதுவைக்கு வந்த காஷ்மீர் அமைச்சர்!

முதியோர் உதவித்தொகை: புதுவைக்கு வந்த காஷ்மீர் அமைச்சர்!

காஷ்மீர் மாநில மந்திரி சவுத்ரி சுல்புகார் நேற்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து, முதியோர் உதவித்தொகையை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் குறித்து கேட்டறிந்தார். புதுச்சேரி மாநிலத்தில் முதியோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவித்தொகை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. இந்த தொகையை பெற முதியவர்கள் வங்கிகளுக்குச் சென்று வர மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதனை அறிந்த முதலமைச்சர் நாராயணசாமி எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து பயனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் முதன் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுவை அரசு சார்பில் இலவச அரிசி உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுவை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களை காஷ்மீர் மாநிலத்திலும் செயல்படுத்தும் நோக்கில் அதுபற்றி அறிந்து கொள்வதற்காக காஷ்மீர் மாநில உணவு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி சவுத்ரி சுல்புகார் நேற்று புதுச்சேரி வந்தார். முதலமைச்சர் நாராயணசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அவர் பேசினார்.

அப்போது புதுவையில் முதியோர் உதவித்தொகை பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து நாராயணசாமியிடம் கேட்டு அறிந்தார். அப்போது அமைச்சர் கந்தசாமி, குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon