மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை!

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை!

நாட்டில் இப்போது நிலவி வரும் சூழலால், பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும், சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாலியல் தொல்லைகள் அதிக அளவில் ஏற்படுகிறது. எனவே அவர்கள் தங்களை தற்காத்து கொள்ளவும், வன்முறையாளர்களிடமிருந்து தப்பித்து கொள்ளவும் தற்காப்பு கலை அவசியம்.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தற்காப்பு கல்வியைப் பள்ளி பருவத்திலிருந்தே மாணவிகள் கற்றுக்கொள்வது அவர்கள் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும், தங்களை தாங்களே பாதுகாக்கும் அளவுக்கு தைரியம் கிடைக்கும். இந்த கராத்தே கல்விக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு, நடப்பாண்டு முதல் தற்காப்பு கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் பயிற்றுனர்களால் கராத்தே, டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள், கற்றுத் தரப்படவுள்ளது. மேலும், இந்த பயிற்சியின்போது ஆசிரியை உடன் இருப்பார். வாரம் இரு நாட்கள் செவ்வாய்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பள்ளி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்க வேண்டும்.

அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதம் வரை இந்த பயிற்சி அளிக்கப்படும். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மூலம் பெண் பயிற்றுனர்களை தேர்வு செய்து, உடனடியாக பயிற்சியை தொடங்க, இடைநிலை கல்வி திட்ட அலுவலர்கள் அனைவருக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகன் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில், 34 பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விரைவில் பயிற்சி தொடங்கும். ஆனால், பெண் பயிற்றுனர்கள் மூலம் பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தனை பயிற்றுனர்கள் கிடைப்பார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த மாதமே பயிற்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்காப்பு கலை பெயரளவுக்கே இருக்கும் என பெற்றோர் கருதுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரைபயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon