மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சென்னை தீவுத்திடலில் 19ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை!

சென்னை தீவுத்திடலில் 19ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை ஆண்டுதோறும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. அதை முன்னிட்டு, புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் போன்றவற்றை மக்கள் வாங்கி வருகின்றனர். ஆனால், ஒரு சில இடத்தில் மட்டுமே பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 58 பட்டாசு கடைகள் அமைக்கப்படவுள்ளது. எனவே, அக்டோபர் 19ஆம் தேதி மாலை ஆறு மணி முதல் முதல் பட்டாசு விற்பனை தீவுத்திடலில் தொடங்கும். பின்னர் அக்டோபர் 30ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை விற்பனை நடைபெறும். மேலும், பாதுகாப்புக்காக தீவுத்திடலில் தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். முக்கியமாக ஒவ்வொரு கடையிலும் தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏராளமான புதிய வகை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. அதில், 240 ஷாட், 20000 வாலா, ஃபேன்சி ரக பட்டாசுகளான டான்சிங் வீல், ஃப்ளவர் வீல், ஃப்ளவர் பாம், எலக்ட்ரிக் ஸ்டோன், கலர் சேஞ்சிங் பட்டர்பிளை, எமரால்டு, நவீன பொம்மை துப்பாக்கிகள் என பல வகையான பட்டாசுகள் விற்பனைக்கு உள்ளன.

ஆனால், கடந்த ஆண்டை விட இப்போது பட்டாசுகளின் விலை 10% உயர்ந்துள்ளது. கிப்ட் பாக்ஸ் பட்டாசின் விலை ரூபாய் 250 முதல் ரூபாய் 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் 10 முதல் 15 % வரை சலுகை வழங்கப்படும். சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பட்டாசு வாங்க சென்னை தீவுத்திடலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி இருக்கும் என பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, தீவு திடலில் பட்டாசு விற்பனைக்காக 80 கடைகள் அமைக்கப்பட்டு படு ஜோராக விற்பனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon