மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சாதிகளிடம் ஜாக்கிரதை - பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்!

சாதிகளிடம் ஜாக்கிரதை - பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்!

Beware Of Castes-Mirchpur என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டமானது யூடியூப்பில் வெளியானது. இந்த ஆவணப்படத்தை தயாரித்திருப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித். ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இயக்குநர் பா.ரஞ்சித், தனது முதல் படத்திலேயே எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்காக கவனிக்கப்பட்டார். விளிம்பு நிலை மக்களே அவரது கதைக்களம் மற்றும் கருப்பொருள். அவரது இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ஸும் அதே போன்ற கதைக்களத்தில் விளிம்பு நிலை மக்களுக்கான தீவிரமான அரசியலைப் பேசியது. இதன்பின் தனது மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ரஞ்சித், ‘கபாலி’ திரைப்படம் மூலம் ஒரு சின்ன அதிர்வலையை தமிழ் திரையுலகில் ஏற்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். இதனாலேயே இந்த ஆவணப்படம் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது என சொல்லலாம். இந்த ஆவணப்படத்தில் எடுத்துக்கொண்ட பிரச்சனையும் விளிம்பு நிலை மக்களின் பிரச்னையே.

2.15 நிமிடங்கள் ஓடும் இந்த முன்னோட்டம் சாதிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்ற தலைப்புடன் முடிகிறது. ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்பூர் கிராமத்தில் 2010ஆம் ஆண்டு நடந்த தலித்துகளுக்கு எதிரான கலவரத்தை ஜெயகுமார் ஆவணப்படமாக இயக்கியுள்ளார். முன்னோட்டத்தின் காட்சிகள் அனைத்தும் அங்கே வாழும் தற்போதைய தலித்துகளின் நிலைமையை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. கைவிடப்பட்ட வீடுகளுக்குள் பன்றிகள் ஓடும் காட்சி அந்த கலவரத்தின் பாதிப்பை தெளிவாக நம்மிடையே காட்டுகிறது. அப்பகுதி மக்கள் கூடாரங்களில்தான் இன்னும் வாழ்கின்றனர். கலவரம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த அவலம் தொடர்கிறது என்பதை இந்த முன்னோட்டம் உணர்த்துகிறது. முன்னோட்டத்தில் வரும் நாயின் குரைப்பு சத்தம் அந்த கலவரத்துக்கான காரணத்தை சொல்கிறது. நாயின் மூலம்தான் அந்த கலவரமே ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதை அதனைப் பற்றி தேடிப் படித்தீர்களானால் தெரிந்து கொள்ளலாம். முன்னோட்டத்தின் 1.45ஆவது நிமிடத்தில் பெண் ஒருவர் பேசும் மொழி புரியாவிட்டாலும் நாங்களும் மனிதர்கள்தானே? என்ற அவரின் ஆதங்கம் உங்களுக்கு நன்றாகப் புரியும். கலவரம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் இந்த ஆவணப்படம் அதனைப் பற்றிய பல்வேறு உண்மை நிலைகளை வெளிக்கொணரலாம்.

மீர்ச்பூர் கலவரம்

ஏப்ரல் 21, 2010ஆம் ஆண்டு மிர்ச்பூர் கிராமத்தில் மிகப்பெரிய கலவரம், அங்கே பால்மீகி காலனியில் இருந்த தலித்துகளின் வீடுகள் ஜாட் சாதியினரால் கொளுத்தப்பட்டது. இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ளது இந்த மிர்ச்பூர் கிராமம். இங்கு அடிக்கடி சாதிய வன்முறைகள் நிகழ்ந்தாலும் இந்த அளவுக்கு பெரிதாக ஒரு கலவரம் அப்பொழுதுதான் நிகழ்ந்தது. குடிபோதையில் வண்டியில் வந்த இரு ஜாட் நபர்களைப் பார்த்து பால்மீகி காலனியில் உள்ள தலித் ஒருவரின் நாய் குரைத்ததுதான் இந்த கலவரத்துக்கான தொடக்கப்புள்ளி. அதன்பிறகு நடந்த சமாதானக் கூட்டம் கலவரத்தில் போய் முடிந்தது. அக்கலவரத்தில் 70 வயது முதியவரான தரா சந்த் என்பவரும் அவரது 18 வயதான மகள் சுமனும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இதில் சுமன் போலியோவால் பாதிக்கப்பட்டவர். மேலும் 18 தலித்துகளின் வீடுகள் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டது. 52 தலித்துகள் படுகாயமடைந்தனர். இக்கலவரத்துக்குப் பின் கிராமத்தை விட்டு வெளியேறிய தலித்துகள் ஆறு ஆண்டுகள் கழித்தும் ஊர் திரும்பவில்லை. இன்னும் தலித் செயல்பாட்டளாரான வேத் பால் தன்வரின் இடத்தில்தான் கூடாரம் போட்டு தங்கியுள்ளனர். இந்த கலவரம் நிகழ்ந்த ஓரிரு தினங்களில் அங்கே கூடிய காப் பஞ்சாயத்து ஜாட் சாதியில் கைது செய்யப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் தலித்துகளின் வீடுகளை அவர்கள் கொளுத்தவில்லை எனவும் கூறித தீர்மானம் நிறைவேற்றினர். அப்பஞ்சாயத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் திறந்தவெளியில் கலந்துகொண்டனர். இந்த கலவரத்துக்குப் பின் ஹரியானா அரசு நீதிபதி இக்பால் சிங் தலைமையில் தனிநபர் கமிஷனை அமைத்தது. காவலர்களின் மெத்தனப்போக்கே இக்கலவரத்துக்குக் காரணம் என 2014இல் அறிக்கை சமர்பித்தார். மேலும் இந்த கலவரத்தின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 97 பேரில் 15 பேர் தண்டனை பெற்றுள்ளனர். அதன்பின் இந்த கலவரம் குறித்த செய்திகள் வெளியாகவில்லை என்பதால் இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் அக்கலவரத்தைப் பற்றிய பல உண்மை நிலவரங்களை நமக்கு தெரிவிக்கும் என நம்பலாம்.

- சா.ஜெ.முகில் தங்கம்

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon