மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

மாணவிகள் பலி – ஸ்டாலின் உருக்கம்!

மாணவிகள் பலி – ஸ்டாலின் உருக்கம்!

சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் மீது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி மோதி மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று மாணவிகள் காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மதியம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“சென்னை கிண்டி அருகில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள் எதிர்காலக் கனவுகளுடன் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவிகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. இப்படியொரு விபத்து, இளம் வயது மாணவிகளை பறிகொடுத்திருக்கும் பெற்றோரையும், உறவினர்களையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவிகளின் குடும்பத்துக்கும், சக மாணவிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து அவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர்கள் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்றும், அதற்குரிய தரமான சிகிச்சையை அரசே முன்வந்து செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் லாரிகள் கட்டுப்பாடற்று இயக்கப்படுகின்றன. இது சாலைகளில் நடப்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அனைவரது உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. கல்லூரி வளாகத்துக்குள் மாநகர பேருந்துகள் வந்து நிற்காத காரணத்தால் மாணவிகள் வெகு தொலைவில் இறங்கி நடந்து வர வேண்டியிருக்கிறது என்றும், அப்படி நடந்து வரும் சாலை குறுகியதாக இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் நேரிடுகிறது என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்களும், செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ‘கல்லூரி வளாகத்துக்குள்ளேயே பேருந்துகள் வந்து மாணவிகளை இறக்கி விட வேண்டும்’ என்று நீண்ட நாட்களாக மாணவிகள் தரப்பில் கோரிக்கை வைத்து வருவதாகவும், அக்கோரிக்கையை மாநகரப் போக்குவரத்துக் கழகம் கண்டு கொள்ளவில்லை என்றும் மாணவிகள் புகார் கூறியிருக்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று விபத்து நிகழ்ந்தவுடன் செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகளே மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

சாலைகளில் நடப்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் சாலையை கடந்து செல்வோரின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக இது போன்று கல்லூரிகள், பள்ளிகள் இருக்கும் இடங்களில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இறங்கி கல்லூரிக்குள்ளும், பள்ளிகளுக்குள்ளும் செல்வதற்கு வசதியாக பேருந்து நிறுத்தங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு இருக்கிறது. ஆகவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சென்னை மாநகர போக்குவரத்து போலீஸாரும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும் இணைந்து இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon