மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

முதல்வர் உடல்நிலை: போராடும் டாக்டர்கள்!

முதல்வர் உடல்நிலை: போராடும் டாக்டர்கள்!

ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் மீண்டும் சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் (செப்டம்பர்) 22ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் உடனடியாக குணப்படுத்தப்பட்டாலும் சளி, மூச்சு திணறல், நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு ஆன்டிபயாடிக் மருந்து, சுவாச உதவி போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் கொண்ட டாக்டர்கள் குழுவினர் ஜெயலலிதாவின் உடல்நிலையை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முதலமைச்சரின் உடல்நிலை குறித்த தகவல்களை அவ்வப்போது அப்பல்லோ நிர்வாகமும் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையே, லண்டனை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் ரிச்சர்டு பேல் சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார். அவருடன் கடந்த 5ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கில்நானி (நுரையீரல் சிகிச்சை நிபுணர்), அஞ்சன் டிரிக்கா (மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர்), நிதிஷ் நாயக் (இதய சிகிச்சை நிபுணர்) ஆகியோர் இணைந்து கொண்டு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் லண்டன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் திரும்பி சென்றனர். நேற்று 22ஆவது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிப்பதற்காக நேற்று எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்துள்ளனர். அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மதியம் 1.30 மணிக்கு வந்த அவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்ததுடன் மேற்கொண்டு சிகிச்சையும் அளித்தனர். 2 மணி நேரத்துக்கு மேலாக சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள், மதியம் 3.50 மணிக்கு மருத்துவமனையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றனர். பின்னர், இரவு 7 மணிக்கு மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொண்டனர். இன்னும் மூன்று நாட்கள் இவர்கள் சென்னையில் தங்கியிருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என தெரிகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 23 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று இரவு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது பயண திட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது.

டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல் இன்று மதியம் மும்பை வருகிறார். அதன் பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். இன்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும் அவர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை மேற்கொள்வார். ரிச்சர்ட் பேலும் ஒரு சில நாட்கள் சென்னையில் தங்கியிருந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பார் என கூறப்படுகிறது.

அப்பல்லோவில் என்ன நடக்கிறது? உண்மையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது? சில நாட்களுக்கு முன் அப்பல்லோவின் மருத்துவ அறிக்கையில் முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. மீண்டும் மருத்துவர் ரிச்சர்ட் பேலை அழைத்து சிகிச்சையை தொடர வேண்டும் என்று முடிவெடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. கடந்த 10ஆம் தேதிக்குப் பின்னர் அப்பல்லோவில் இருந்து அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை. அடுத்த அறிக்கை வந்த பிறகுதான் முதல்வரின் உடல்நிலை பற்றி தெளிவாகும்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon