மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

ஓ.பி.எஸ்ஸுக்கு காத்திருக்கும் சவால்கள்!

ஓ.பி.எஸ்ஸுக்கு காத்திருக்கும் சவால்கள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த முக்கிய இலாகாக்கள் அனைத்தும் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பணிவுக்கும், எளிமைக்கும் பெயர் பெற்ற அவர் மீது அதிர்ஷ்டக்காற்று வீசுவது இது மூன்றாவது முறை. ஆனால், இம்முறை அவர் சந்திக்கப்போகும் சவால்கள் சற்று கடுமையானவையாக இருக்கும்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2001, 2014ஆம் ஆண்டுகளில் சட்ட சிக்கல்களால் சோதனை வந்தபோது தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டவர் ஓ.பி.எஸ். ஆனால், இப்போது முதல்வர் ஜெ-வுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்றே முதலில் சொல்லப்பட்டது. ஜெ-வின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வேறு சில அமைச்சர்களின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில் முதல்வரைப் பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துவிட்டுச் சென்ற கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசின் நிர்வாகம் குறித்து சீனியர் அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஓ.பி.எஸ்ஸுடன் உடன் சென்றார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் ஆட்சித் தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் பெயர்தான் முதல்வர் பதவிக்கு அடிபட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக ஓ.பி.எஸ். முதல்வரின் இலாகாக்களை கவனிப்பார் என கவர்னர் மாளிகை அறிவித்தது.

அதைத் தொடர்ந்து விடுமுறை நாளிலும் கோட்டைக்கு வந்து ஃபைல் பார்க்க ஆரம்பித்துவிட்டார் ஓ.பி.எஸ். நேற்று வருவாய்த்துறையினருடன் ஆலோசனை நடத்தியவர், சில முக்கிய கோப்புகளிலும் கையெழுத்திட்டாராம். அவருக்கு ஏற்கெனவே நிதி, வருவாய், பொதுப்பணி உள்ளிட்ட துறைகளை நிர்வகித்த அனுபவம் உண்டு. இம்முறை கூடுதலாக இந்திய ஆட்சிப் பணி, காவல் பணிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவிக்கு ஆபத்தில்லை என்றாலும் அரசியல்ரீதியாக அவர் சில சவால்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. குறிப்பாக 2016ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ஓ.பி.எஸ். மீது கடும் அதிருப்தி அடைந்தது கட்சி மேலிடம். சென்னை ஏர்போர்ட்டுக்கும், வீட்டுக்குமாக அவரை அலைய விட்டதாக எல்லாம் சொல்லப்பட்டது. அவரது மகன், தம்பி மீதெல்லாம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் சமாளித்து வந்தவர் முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு தனிமைப்படுத்தப்பட்டார்.

முன்பு போல் இல்லாமல் இப்போது அவருக்கு முக்கியப் பதவி கொடுக்கப்பட்டாலும் அமைச்சர்கள் யாரும் அவரை இதுவரை சந்திக்கவில்லையாம். மாநிலத்தின் அதிகாரம் தன்னிடம் இருந்தாலும், தான் சொன்னால் அமைச்சர்கள் யாரும் கேட்பார்களா என்கிற தயக்கமும் அவரிடம் காணப்படுகிறது. அரசியலில் இதுவெல்லாம் சகஜம்தான் என்றாலும் இந்தப் புதிய சாவல்கள் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். இந்நிலையில் அவரது சொந்த ஊரான தேனியில் அவருக்கு எதிரான அரசியல் காய் நகர்த்தல்கள் தொடங்கியிருப்பது அவரை வேதனைப்படுத்தியிருக்கிறது. அம்மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக அரசியல் செய்கிறார்களாம். இது அவருக்குக் கடுமையான வேதனையைக் கொடுத்திருக்கிறதாம். இருந்தாலும் எப்போதும்போல் புன்னகைத்தபடியே சமாளித்து கோட்டைக்குள் வலம் வருகிறாராம்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon