மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

இலங்கை புதிய சட்டத்தில் பவுத்தம் உயர்ந்ததா? சிவசேனா அங்கும் உதயம்!

இலங்கை புதிய சட்டத்தில் பவுத்தம் உயர்ந்ததா? சிவசேனா அங்கும் உதயம்!

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-வுடன் கூட்டணியில் இருந்ததும் வெளியே வந்ததும், தேர்தல் அரசியல் என்றால் இந்து மத உணர்வுகளை எழுப்பி முஸ்லிம்களுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் பிரச்னைகளைக் கிளப்புவது சிவசேனா கட்சியினர்தான் என்பது ஊரறிந்த விஷயம். அப்படிப்பட்ட சிவசேனா கட்சியை, இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் தமிழர் வாழும் பகுதிகளிலும் நிறுத்துவதற்கு ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்பது நல்லதா? கெட்டதா?

சென்னையில் பல ஆண்டுகளாக, ‘காந்தளகம்’ என்ற பதிப்பகத்தை நடத்திவரும் சச்சிதானந்தம் தான் அந்த முயற்சியை செய்கிறார். சைவ சிந்தாந்த சிந்தனையாளரும், சிறந்த தமிழ் ஈழப் பற்றாளருமான, அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படும் ‘மறவன்புலவு சச்சி அண்ணன்தான்’ இத்தகைய முயற்சியை செய்கிறார். ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் இந்துகள் என்ற சூழலில், ‘சைவம்’ தான் அதிகமாக தமிழர்கள் மத்தியில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மை இருப்பதனால், இந்து மதத்தை பாதுகாக்கத்தான் இந்த அமைப்புக்கு ‘சிவசேனா’ என்று பெயரிட்டதாகக் கூறுகிறார். மத மாற்றத்தை தடுப்பதற்காகப் பாடுபடுவோம் என்கிறார். இவரது முயற்சிக்கு ஆதரவாக மட்டுநகர் எம்.பி. யோகேஸ்வரன் இருப்பதாக கூறப்படுகிறது. யோகேஸ்வரன் எப்போதுமே நெற்றியில் திருநீறு பட்டையுடன் வேட்டி அணிந்து காணப்படுவார். முஸ்லிம்களுக்கு ஈராக், ஈராக் நாடுகளிலிருந்தும், கிறிஸ்துவர்களுக்கு மேற்கத்திய நாடுகளிலிருந்தும் நிதி வருவதாகவும், இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாஜக ஆகிய இந்து அமைப்புகள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் சச்சிதானந்தம் கூறியுள்ளார். இது ஈழத்தமிழர்களின் மதங்கள் தாண்டிய ஒற்றுமையை உடைக்காதா? என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசாங்கம், ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கும் இயக்கப்போக்கில் இருக்கிறோம் என்று கூறி வருகிறது. அந்த சட்டத்தில், இலங்கை ஒரு ‘பவுத்த நாடாக அறிவிக்கப்படுமா? அல்லது ஒரு மதச் சார்பற்ற நாடாக அறிவிக்கப்படுமா?’ என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. ‘பவுத்தத்துக்கு முதல் இடம் கொடுக்கப்படும்’ என்று பிரதமர் ரணில் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழர்களின் சைவ அடையாளங்களை அழித்து, சிங்களர்களின் பவுத்த அடையாளங்களை ஏற்படுத்தும் ‘ஆக்கிரமிப்பு’ வேலையை சிங்கள, பவுத்த பேரினவாத அரசும், சிங்கள ராணுவமும் தமிழர் பகுதிகளில் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இத்தகைய சூழலில், ‘பொது பால சேனா’ என்ற புத்த பிக்குகளின் அமைப்பு, தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக, சைவத் தமிழர், இஸ்லாமியத் தமிழர், கிறிஸ்துவத் தமிழர் ஆகியோரின் வழிபாட்டுத் தளங்களைச் சிதைக்கும் வேலைகளை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. ஈழத்து தமிழர்களை, இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டுக்கு ஓடுங்கள் என்று அந்த பொது பால சேனாவின் புத்த பிக்குகள் சமீபத்தில் கூறிவருகிறார்கள். கூடுதலாக, புதிதாக வருகின்ற அரசியல் சட்டம் ‘பவுத்தத்துக்கு முதலிடம்’ என்று கூறுமானால், அதுவே, ‘சிங்கள மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற கொள்கை வந்தபோதுதான், ஈழத்து தமிழர்களின் விடுதலைப் போர் தொடங்கியது’ என்ற கருத்தும் பேசப்படுகிறது. அப்படி ஒரு மோதலை புதிய ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்கின்றார்களோ? என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய சூழலில் இந்து தமிழர்கள், கிறிஸ்துவத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் மதமற்ற தமிழர்கள், நாத்திகத் தமிழர்கள் என அனைவரும் ஒரே அணியில் தமிழர்களாக இணைந்து நின்று சிங்கள, பவுத்த பேரினவாதத் தாக்குதலை எதிர்த்து தமிழர்களைப் பாதுகாக்க பணியாற்ற வேண்டுமா? சைவ அடையாளத்தை மட்டுமே காட்டி, இந்து மத ஒற்றுமையை ஏற்படுத்தி, தமிழர்களின் ஒற்றுமையை உடைக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இத்தகைய ஒரு வேலையைச் செய்வது, தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க விரும்பும், வெளிச்சக்திகளான இன அழிப்பு போரை நடத்திய சக்திகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதும், அத்தகைய வெளிச்ச சக்திகள் இதனை ஊக்குவிப்பார்கள் என்பதும் தெளிவாகப் புரிகிறது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon