மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

டாஸ்மாக்: தீபாவளிக்கு ரூ.500 கோடி இலக்கு!

டாஸ்மாக்: தீபாவளிக்கு ரூ.500 கோடி இலக்கு!

தமிழகத்தில் கடந்த ஆயுதபூஜை விடுமுறையில் நான்கு நாட்களில் மட்டும் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை நடந்துள்ள நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.500 கோடிக்கு சரக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதால் சரக்கு சப்ளை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், 6,292 டாஸ்மாக் கடைகளின் மூலம் தினசரி சராசரியாக, ரூ.68 கோடிக்கும், ஞாயிறு உள்ளிட்ட விசேஷ நாளில் ரூ.95 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாளில் ரூ.100 கோடியை தாண்டுவது வழக்கம். கடந்த ஆண்டு தீபாவளி நாளில் ரூ.150 கோடிக்கு விற்பனை நடந்த நிலையில், தீபாவளிக்கு முதல் நாளில் ரூ.92 கோடி, மறுநாளில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.342 கோடிக்கு மது விற்பனை நடந்தது.

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 29 சனிக்கிழமையும், அடுத்த நாள் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையும் என்பதால் அந்நாட்களில் ரூ.500 கோடிக்கு மது விற்பனை செய்ய அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்காக, வழக்கமான மது சப்ளையை விட, 40 சதவிகிதம் கூடுதல் சப்ளை கடைகளுக்கு வழங்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: “கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது அடைமழை கொட்டித் தீர்த்ததால், மது விற்பனையில் 40 சதவிகிதம் சரிவு ஏற்பட்டது. நடப்பாண்டில் சனிக்கிழமையன்று தீபாவளி வருவதாலும், ஞாயிறு அன்று விடுமுறை என்பதாலும் ரூ.500 கோடிக்கு மது விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon