மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 28 மா 2020

நடைமுறைக்கு வந்தது பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்!

நடைமுறைக்கு வந்தது பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்!

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, இவ்வாண்டு காரிப் பருவம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்துறை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு விதமான பயிர்கள் வறட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்போது, தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் இழப்பீடு பெற்று வந்தனர். இதில், வட்டாரம் மற்றும் பிர்கா வாரியாக பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெறும் நிலை இருந்தது. இதனால், விவசாயிகள் இழப்பீடு பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்தது. இந்நிலையில், தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டு, பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வருவாய் கிராமத்துக்கு 4 வீதம், பயிர் அறுவடை பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் பயிர் இழப்பீடு கணக்கிடப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு நிறுவனம் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. காப்பீட்டு தொகையாக ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.333-ம், உளுந்து, பாசி பயறு போன்றவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.180-ம், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.1,680-ம், நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.195-ம், வாழை ஏக்கருக்கு ரூ.2,185 என காப்பீட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பா நெல் சாகுபடிக்கு காப்பீடு செய்ய நவம்பர் 30ஆம் தேதியும், இதர பயிர்களுக்கு 2017 ஜனவரி 15ஆம் தேதியும் கடைசி நாட்களாகும். மேலும், விவரங்களுக்கு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை அணுகலாம். காப்பீடு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வங்கி சலான்களை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon