மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ரேஷன் பொருட்கள்: புகார் தெரிவிக்க செல்போன் எண்கள்!

ரேஷன் பொருட்கள்: புகார்  தெரிவிக்க செல்போன் எண்கள்!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு செல்லும் பெரும்பாலான மக்கள், உளுத்தம் பருப்பு இல்லை என்னும் பதிலைதான் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காகவே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடை திறக்கும் முன்னரே வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். வீட்டில் இருக்கும் இல்லதரசிகள் காத்திருப்பதே சவாலாக இருக்கும் நிலையில் வேலைக்குச் செல்லுபவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. சில ரேஷன் கடைகளில் சரக்கு வரவில்லை என கூறி மக்களை திருப்பி அனுப்புகின்றனர். வேலைக்கு செல்லும் பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு மாதமும் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னையில் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; மதியம் 3:00 முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான ரேஷன் கடைகள் மாலை ஆறு மணிக்கு மேல் இயங்குவதே இல்லை. ஆறு மணிக்கு மேல் பொருட்கள் வாங்க வரும் மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். மேலும், ரேஷன் பொருட்கள் பதுக்கி கடத்தப்படும் குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

எனவே, இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கும் மற்றும் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த குறைபாடுகளைத் தெரிவிப்பதற்கும் செல்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில், நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உணவுத்துறை முதன்மைச் செயலர் (பொறுப்பு) கே.கோபால், உணவு பொருள் குற்றப் புலானாய்வுத்துறை இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில், “தமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டத்துக்கு மூன்று மாத தேவைக்கான அரிசி கையிருப்பில் உள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை, வடகிழக்குப் பருவமழை ஆகிய காலங்களில் தேவைப்படும் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்த குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் 044-28592828 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் 9445190660, 9445190661, 9445190662 ஆகிய செல்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதுவரை அத்தியாவசியப் பொருட்கள் கடத்துவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மட்டும் சுமார் 912 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon