மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 16 செப் 2019

100 சதவிகித தேர்ச்சி – அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு!

100 சதவிகித தேர்ச்சி – அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு!

கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவிகிதம் தேர்ச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கவுரவிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 2004ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஊக்கப்பரிசு திட்டங்களை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, நுாறு சதவிகித தேர்ச்சி இலக்கினை எட்டிய நகர்ப்புற அரசு பள்ளிகளுக்கும், 90 சதவிகிதம் தேர்ச்சி அளித்த கிராமப்புற பள்ளிகளுக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது. அத்துடன், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவிகித தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு, ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள கேடயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டம், 2011ஆம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டது. தங்கள் பாடத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் மத்தியில் இது பெரும் குறையாக இருந்து வந்தது. ஆனால், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் குமார் மேற்கொண்ட முயற்சி காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்வில் நூறு சதவிகித தேர்ச்சி அளித்த 3,935 ஆசிரியர்கள், சில மாதங்களுக்கு முன் கவுரவிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வில் தங்கள் பாடத்தில் ‘சென்டம்’ தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படாமல் இருந்தனர். தற்போது, கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடம் வாரியாக சென்டம் தேர்ச்சி கொடுத்த, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 775 ஆசிரியர்களைக் கவுரப்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த காலங்களில் ஆசிரியர்களை கவுரப்படுத்தும் விதமாக, ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள ஒரு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இது, ஆசிரியர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதையடுத்து, தற்போது கவுரவிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பரிசாக, 92 சதவிகித துாய்மை கொண்ட வெள்ளி நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த வெள்ளி நாணயங்களைத் தயாரித்து வழங்க, பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் கோரி உள்ளது. நவம்பர் 3ஆம் தேதி, டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon