மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஆம்னி பஸ்ஸில் அதிக கட்டணம் – புகார் அளிக்க அரசு ஏற்பாடு!

ஆம்னி பஸ்ஸில் அதிக கட்டணம் – புகார் அளிக்க அரசு ஏற்பாடு!

மின்னம்பலம்

காவிரி நதிநீரால் தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் கிட்டதட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் தங்களுக்குச் சாதகமாக கட்டணங்களை அதிகப்படுத்தி கொண்டன. அதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், அது குறித்த புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்த 120-க்கும் மேற்பட்ட சிறப்புக் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக நடத்திய சோதனையில் 446 ஆம்னி பேருந்துகளுக்கு விதிகளை மீறியது குறித்து நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும், 13ஆம் தேதி வரை இந்த சோதனை நடைபெறும் என்று போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக அதிகமான புகார்கள் வந்ததையடுத்து, அது குறித்து தெரிவிக்க இலவசமாக தொலைபேசி மூலம் தெரிவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து, புகார்கள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் 1800 425 6151 என்ற இலவச தொலைபேசி இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் செயல்படுகின்ற ஆம்னி பேருந்துகளில் அதிகமான கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம். அப்புகார்கள் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பப்படும். பின்னர், புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.13.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து, சில இடங்களில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து பணத்தை வாங்கி சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு திருப்பி அளித்துள்ளோம்” என்று போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon