மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

புதினா- மருத்துவப் பயன்கள்!

புதினா- மருத்துவப் பயன்கள்!

உணவுகள் தயாரிப்பதில் மணத்துக்காக சேர்க்கப்படும் முக்கியமான பொருள்களில் புதினா இலைகளும் இன்றியமையாதது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றனர். இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர். புதினா செடி வகையைச் சார்ந்தது. செங்குத்தாக 60 செமீ வரை வளரக் கூடியவை. புதினா இலைகள் 5 செமீ வரை நீளமானவை. இலைக் காம்புகள் சிறியதாகவோ, காம்புகள் இல்லாமலோ இருக்கும். இந்தச் செடியின் உலர்ந்த இலைகள் மற்றும் பூக்களின் மேற்பகுதியில் இருந்து பெப்பர்மின்ட் தயாரிக்கப்படுகிறது.

புதினா பூக்கள் சிறியவை. இளஞ்சிவப்பு நிறமானவை. சிறிய கொத்துகளில் காணப்படும். 1500 முதல் 3000 மீட்டர் வரை உயரமுள்ள மலைப் பகுதிகளில் இயற்கையாகவும், பயிர் செய்யப்பட்டும் வருகிறது. ஈயெச்சக் கீரை, புதியன் மூலி, பொதிரை ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப்பயன் கொண்டது. புதினா அதன் மெந்தால் மற்றும் பெப்பர்மின்ட் எண்ணெய்க்காக பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பானிலிருந்து பெறப்பட்ட ஒரு வகை புதினா தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அதிகமாகப் பயிர் செய்யப்படுகின்றது.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, ரிபோபேளவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் என எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றளவும் கூட இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மன இறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம் ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினா.

உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான பிரச்னைகள் குறையும்.

புதிதாக பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமாகும்; நன்கு பசியெடுக்கும். ஒரு கப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினா துவையல், புதினா சட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும். அடிக்கடி வயிற்றுவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாகக் குணமாகும்.

புதினாவை தேநீர் தயாரித்தும் குடிக்கலாம். பால் சேர்த்து தயாரித்தால் இன்னும் நல்லது. பால் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினா தேநீர் வயிற்று வலியைப் போக்கி நலம் பயக்கும்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon