மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

ஹர்பஜன் - அஸ்வின் ‘சுழற்போர்’! அவ்வளவு சத்தமாவா கேக்குது?

ஹர்பஜன் - அஸ்வின் ‘சுழற்போர்’! அவ்வளவு சத்தமாவா கேக்குது?

ஹர்பஜன் சிங்குக்கும், அஸ்வின் ரவிச்சந்திரனுக்கும் இடையே பெரும்போரையே தொடங்கியிருக்கிறது. ஆரம்பித்தவர் வழக்கம்போலவே நமது பாஜி தான்.(பாஜி அவரது செல்லப்பெயர்). இந்திய அணியில் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட் எடுத்த பவுலர் என்ற சிறப்பைப் அஸ்வின் அடைந்ததால் இந்த போர் தொடங்கியிருக்கிறது. தன்னை யாராவது எள்ளிநகையாடினால் அதைப் பொறுத்துக்கொள்ளாதவர் ஹர்பஜன். ஐபிஎல் போட்டியின்போது ஸ்ரீசந்த் வாங்கிய அறை அநேகமாக நினைவிருக்கும். அந்த அளவுக்கு டென்ஷனான ஹர்பஜன் சிங்கை நேஷனல் மீடியாக்கள் இந்த அளவுக்கு கடுப்பாக்கிவிட்டனர். அதிலும் அவரது வாயிலிருந்தே வார்த்தைகளைப் பிடுங்கி அதை சிறப்பாக் செய்துவிட்டார்கள். இந்திய A அணியின் அனைத்துவிதமான ஃபார்மேட்டிலிருந்தும் ஹர்பஜன் சிங் வெளியே சென்றுவிட்டார். அதனால், ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின்போதும் உங்கள் கருத்து என்ன? என்று அவரிடம் சிலவற்றைக் கேட்டுப் பிரசூரிக்கிறார்கள். அணியில் இல்லாவிட்டாலும் ஸ்போர்ட்ஸ் பகுதியில் தனது ஃபோட்டோ வருவதைக் கண்டு மகிழ்ந்திருந்த ஹர்பஜனுக்கு, இப்போது ‘ஹர்பஜனை பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்’ என்ற செய்தியைப் படிக்க கடுப்பாக இருக்குமா? இல்லையா?

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி தொடங்கியபோதும் ஹர்பஜனிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது ஹர்பஜன்...

கிரிக்கெட் போட்டிகளை வெல்ல சாதனையாளர்கள் தேவையில்லை என்ற நிலைக்கு இந்திய அணி வந்துவிட்டது. பல காலமாக பயன்படுதப்பட்டு வந்த ‘சாதனையாளர்கள்’ என்ற பிம்பத்தை உடைத்து, உள்நாட்டு மைதானத்தில் வெளிநாட்டு ஸ்பின் பவுலர்ஸிடம் விக்கெட்டைப் பறிகொடுத்த காலம் போய்விட்டது என்பதை உணர்த்த இந்திய அணி தயாராக இருக்கிறது

இப்படி டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களைப் புகழ்ந்தவரை, டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஹர்பஜன் சாதனை முறியடிக்கப்பட்டது என்று தொடர்ந்து பேசிவந்ததால் கடுப்பாகி, கொல்கத்தா நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘எப்போதும் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும் மைதானம், இம்முறை முழுமையாகவே சாதகமானதாக மாற்றப்பட்டிருக்கிறது. சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங்குக்கு பேலன்ஸ் செய்துதான் மைதானத்தை உருவாக்கவேண்டும். திறமை தான் முடிவை நிர்ணயிக்கவேண்டுமே தவிர மைதானத்தின் நிலை அல்ல. மைதானத்தின் நிலை அதிக பங்கெடுக்கும்போது, திறமை பின்தங்கிவிடுகிறது. என்று கூறியிருக்கிறார் ஹர்பஜன். இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசிக்கொண்டிருக்கும் ஹர்பஜனுக்கு அவரது சாதனைகள், பாராட்டுக்களிலிருந்தே நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். ஒன்றே ஒன்றை சொல்லவேண்டுமென்றால், ‘இரண்டு வருடங்களுக்கு முன்பு ரஞ்சி டிராபியில் ஸ்பின் பவுலிங்குக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஹர்பஜனால், கர்நாடகாவைச் சேர்ந்த இளம்கன்றாக களம் கண்ட கருண் நாயரின் விக்கெட்டை எத்தனையோ ஓவர்கள் வீசியும் வீழ்த்தமுடியாமல் வெற்றியைத் தவறவிட்டதைச் சொல்லலாம். ஆனால், ‘நானோ, கோலியோ அல்லது கும்பிளேவோ மைதானத்தில் நீரை ஊற்றி அதன் நிலையை மாற்றவில்லை’ என அஸ்வின் சொன்ன பதில் போதுமானது. ஹர்பஜனின் செயலுக்கு ட்விட்டரில் கிண்டல் செய்பவர்கள் அஸ்வினிடம், ‘உங்களுக்கும் ஹர்பஜனுக்கும் என்ன சண்டை?’ எனக் கேட்டபோதுகூட ‘அவ்வளவு சத்தமாவா கேக்குது?’ என்ற ரிப்ளையுடன் முடித்துக்கொண்டார் அஸ்வின். இனி அவரைத் தடுக்க யார் நினைத்தாலும் முடியாது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon