மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 15 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: வளர்ச்சி எங்கே? தீர்வு காணுமா மத்திய அரசு?

சிறப்புக் கட்டுரை: வளர்ச்சி எங்கே? தீர்வு காணுமா மத்திய அரசு?

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தீர்வு காண்போம்’ என்று நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக பிரதமர் மோடி முன்வைத்தார். பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் மத்தியில் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, அதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அளவை குறைக்கும்விதமாகவும் தனது கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவை ஒரு மிகப்பெரிய உற்பத்தி கூடமாக மாற்றி, அதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் உற்பத்தி துறை இன்னமும் மந்த நிலையிலேயே உள்ளது.

தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சியை ஆய்வு செய்ய மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தொழில்துறை உற்பத்தி குறியீடு குறித்த தகவலை வெளியிடும். தொழில்துறை உற்பத்தி துறைகளில் உள்ள வெவ்வேறு நிறுவனங்கள் வழங்கும் தகவலின் அடிப்படையில் இந்த குறியீடு கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்தி குறியீடு நாட்டின் உற்பத்தி அளவு சரிவில் இருப்பதையே காண்பித்தது. கடந்த 10 வருடங்களில் காணாத வீழ்ச்சியை தொழில்துறை உற்பத்தி குறியீடு கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதத்தில் சந்தித்ததாக ‘மின்ட்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்து வரும் சூழலில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. பல்வேறு சாட்சியங்கள் மற்றும் புள்ளி விவரங்கள் உற்பத்தி துறையில் உள்ள சரிவை சுட்டிக்காட்டுகின்ற போதிலும் மத்திய வர்த்தக மற்றும் நிதி அமைச்சகம் இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சியடையும் என்று நம்புகின்றன. ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் உள்ள சரிவு அடுத்து வரவிருக்கும் மாதங்களில் ஒரு உறுதியான நிலையை அடையும் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து சரிவில் இருந்த ஏற்றுமதியை பற்றி கருத்து தெரிவித்த மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தற்போதைய சூழலில் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் நிலையான ஏற்றுமதி சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். இந்த வளர்ச்சி மெதுவாக இருந்தாலும் நிலையாக இருக்கும்’ என்றார்.

கடந்த 17 மாதங்களாக தொடர்ந்து சரிவில் இருந்த ஏற்றுமதி கடந்த ஜுன் மாதத்தில் சரிவில் இருந்து வளர்ச்சிப்பாதைக்குச் சென்றது. ஆனால் அடுத்த ஜூலை மாதத்தில் மீண்டும் சரிவை நோக்கி பயணித்தது. பொதுத்துறை வங்கிகளின் செயல்படாத சொத்துகளாக இருக்கும் ஸ்டீல் துறை லாபம் அடைய தொடங்கியள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். அதேபோல உலகளவில் உற்பத்தியில் சரிவு காணப்பட்டாலும் இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை இதற்கு எதிர்மறையான தகவலை நமக்கு தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் உற்பத்தி துறை சென்ற ஆண்டை விட 2.6 சதவிகிதம் சரியும் என்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்திய உற்பத்தி துறையில் எவ்வித வளர்ச்சியும் அடைவதற்கான அடையாளங்கள் இல்லை என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்தது.

உற்பத்தி துறை குறியீட்டை உன்னிப்பாக ஆராய்ந்தால் நமக்கு மேலும் தெளிவான தகவல்கள் கிடைக்கும். கடந்த 2016-17ஆம் ஆண்டின் முதல் பாதியில் உற்பத்தி துறை 4.7 சதவிகிதம் சரிந்துள்ளது. அதேபோல வங்கிகள் உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடனின் அளவும் சரிந்துள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் வழங்கிய கடனை விட இந்த வருடம் அதே ஆகஸ்ட் மாதத்தில் 0.2 சதவிகிதம் சரிந்துள்ளது. அதேபோல, ஜவுளி, கட்டுமானம் மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளுக்கு வங்கிகள் வழங்கும் கடனும் நடப்பு நிதியாண்டில் 1 முதல் 7 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு செல்ல வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். பின்னர் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற உர்ஜித் படேல் சென்ற மாதம் ரேப்கோ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்தார். ஆனால், இந்த நடவடிக்கை உற்பத்தி துறையில் உள்ள தேக்க நிலையை சரிசெய்ய உதவாது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலைவாய்ப்பு என்னவானது?

சரிவில் இருக்கும் உற்பத்தி துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று அதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மற்றுமொரு இலக்கும் இன்றளவில் நிறைவடையவில்லை. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 2015-16ஆம் ஆண்டு இந்தியாவில் வேலையின்மை 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் வேலையின்மை 8.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

‘உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சரிவினால் வேலைவாய்ப்பு விகிதமும் சரிவில் உள்ளது. மேலும், உற்பத்தி துறையில் ஊழியர்களை பணியமர்த்துவதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உற்பத்தி நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் அதிக கவனம் செலுத்துவதும் வேலைவாய்ப்பு குறையக் காரணமாக உள்ளது’ என்று தேசிய புள்ளி விவர ஆணையத்தின் முன்னாள் தலைவர் ப்ரோபன் சென் தெரிவித்தார்.

எனவே, இக்காரணிகள் அனைத்தும் இந்திய உற்பத்தி துறைக்குக் கடுமையானச் சவால்களை அளிக்கும். எனவே, மோடி அரசு வேலைவாய்ப்பு குறித்த எண்ணிக்கை குறித்து விவாதிக்காமல் பிரச்னைகளை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் இந்த பிரச்னைகளை நொடிப்பொழுதில் சரி செய்ய வேண்டியதில்லை. மாறாக, தனியார் துறையை லாபம் தரும் ஒன்றாக செயல்படுத்தி லாபம் பெற செய்யலாம். எனவே மத்திய அரசு இந்தியாவில் நிலவும் பிரச்னைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கான தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: மாயங்க் ஜெயின்

நன்றி: ஸ்க்ரோல்

http://scroll.in/article/818854/indian-industry-is-on-life-support-and-the-governments-denial-of-this-isnt-helping

தமிழில்: ரிச்சர்ட்சன்

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon