மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

விற்பனைச் சந்தையாகும் விமான நிலையங்கள்!

விற்பனைச் சந்தையாகும் விமான நிலையங்கள்!

இந்திய விமானங்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவரும் நிலையில் மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்திய விமான நிலையங்களில் புதிதாக சில்லறை விற்பனை மையங்கள் அமைப்பதற்கான போட்டி அதிகரிக்கும் என்று ஜே.எல்.எல்.இந்தியா ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜே.எல்.எல்.இந்தியா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் ரெஞ்சன் கூறுகையில், “உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருகைதரும் பயணிகளின் எண்ணிக்கையும் உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. எனவே, மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்கள் ஏற்கனவே உள்ள சில்லறை விற்பனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவுசெய்துள்ளன.

இந்த விமான நிலையங்களில் எலக்ட்ரானிக் உபகரணங்கள், புத்தகங்கள், குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருட்கள், ஆப்டிகல்ஸ், ஒயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விற்பனையாளர்களுக்கு அழைப்புவிடப்பட்டுள்ளது. எனவே, பிராண்டட் நிறுவனங்களுக்கிடையே இங்கு விற்பனை மையங்கள் அமைக்க கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையங்களில் துணிக்கடைகள் அமைப்பதற்கு 500 முதல் 5000 சதுரஅடி பரப்பு இடமும், புத்தகக் கடைகள் அமைப்பதற்கு 200 முதல் 300 சதுரஅடி பரப்பு இடமும் தேவைப்படும். இந்திய விமான நிலையங்களில் அதிகபட்சமாக, டெல்லி சர்வதேச விமான நிலையம் 2015-16 நிதியாண்டில் 48 மில்லியன் பயணிகள் எண்ணிக்கையைக் கடந்து சாதனை படைத்தது. முந்தைய நிதியாண்டைவிட பயணிகள் போக்குவரத்து 18 சதவிகிதம் உயர்வடைந்துள்ளது. இதுபோலவே, மற்ற இந்திய விமான நிலையங்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, இங்கு விற்பனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது சிறந்த முடிவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon