மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

உபேருடன் போட்டி! நிதி திரட்டும் ஓலா!

உபேருடன் போட்டி! நிதி திரட்டும் ஓலா!

இந்தியாவில் தனது சேவையை அதிகரிக்க அதிகளவில் முதலீடு செய்ய உபேர் திட்டமிட்டுள்ளநிலையில், உபேரிடம் தனது சந்தை மதிப்பை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் ஓலா நிறுவனம் 500 மில்லியன் டாலர் நிதி திரட்ட முடிவுசெய்துள்ளது.

ஓலா நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளராக உள்ள சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் 500 மில்லியன் டாலர் நிதி திரட்டும் பேச்சுவார்த்தையில் ஓலா ஈடுபட்டுள்ளது. இதுதவிர, தனது இதர முதலீட்டாளர்களிடமும் நிதி திரட்ட முயற்சிக்கிறது ஓலா. சமீபத்தில், ஆட்டோமொபைல் நிறுவனமான மேஜர் ஜெனரல் மோட்டார்ஸிடம் நிதி திரட்ட ஓலா முயற்சித்தது. ஆனால் இறுதியில் இந்த முயற்சி தோல்வியடைந்தது.

சீனாவில் உள்ளூர் டாக்சி நிறுவனமான திதி-யின் கடுமையான போட்டியை தாக்குப்பிடிக்க முடியாத உபேர், சீனாவில் தனது சேவையை திதி-யிடம் விற்றது. சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறிய உபேர், தனது அடுத்த இலக்காக இந்தியாவைத் தேர்வுசெய்து அதற்கான வேலைகளில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளது. சீனாவில் தனது சேவையை விற்றதில் கிடைத்த தொகையை இந்தியாவில் முதலீடு செய்ய உபேர் முடிவுசெய்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஓலா, தனது சந்தையை உபேரிடம் இழக்கக் கூடாது என்ற நோக்கத்தில் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. உபேரின் வருகை தனக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஓலா தெரிவித்துள்ளது. தற்போதையநிலையில், நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பயணங்களை மேற்கொள்ளும் ஓலா, இந்தியாவின் டாக்சி சந்தையில் 70 சதவிகிதம் தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதேபோல, மறுபுறம் உபேர் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை 28 நகரங்களுக்கு அதிகரித்து, நாள் ஒன்றுக்கு 5.5 லட்சம் பயணங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஓலா மற்றும் உபேர் நிறுவனங்களுக்கு இடையே உள்ள கடுமையான போட்டி குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள...... http://minnambalam.com/k/1476124213

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon