மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்: ஆனால், அன்று இப்படி இல்லை -இளங்கோவன் ராஜசேகரன்!

அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்: ஆனால், அன்று இப்படி இல்லை -இளங்கோவன் ராஜசேகரன்!

தமிழகத்தின் முப்பது வருட கால அரசியல் சூழலை அதன் இயல்போடு பயணித்து கவனித்தவர்களுக்கு தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மறைக்கப்பட்டு வரும் ரகசியங்களும் பரப்பப்படும் அவதூறுகளும் பல்வேறு அவதானிப்புகளும் 1984இல் அதிமுக நிறுவனரான எம்.ஜி.ராமச்சந்திரனின் உடல் சுகவீனமான நிலையும் அதையொட்டிய சம்பவங்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இதே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி லேசான ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் தொந்தரவுக்காக அனுமதிக்கப்பட்டார் என்று அப்போது அப்பல்லோ மருத்துவர்கள் கூறினார்கள். 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவும் லேசான காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதே அப்பல்லோ தரப்பிலிருந்து கூறப்பட்டது.

அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளிவரவில்லை என்றாலும் அவர் எம்.ஜி.ஆரைப் போலவே ஒரு நீரிழிவு நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர். சந்தித்த அதே உடல் உபாதைகளை ஜெயலலிதாவும் தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் குறித்தான தகவல்கள் எதுவும் மக்களிடமிருந்து மறைத்து வைக்கப்படவில்லை. அவருக்கு ஆஸ்துமா தொந்தரவும் சிறுநீரக கோளாறும் உள்ளதென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களிலேயே அறிக்கைகளாக வெளி வந்தன. அதுவும் மருத்துவமனை நிர்வாகம் முதலமைச்சரின் விருப்பத்துக்கு மாறாக அவர் தொடர்பான மருத்துவ அறிக்கைகளோடு அவர் குறித்து செய்திகளையும் அப்போது வெளியிட தொடங்கியது. ஆனால், எம்.ஜி.ஆரோ அவரின் உடல்நிலை குறித்த தகவல்களை பொதுவெளியில் தெரியப்படுத்த வேண்டாம். அது தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் வேதனை அடைய செய்யும் என்று கூறினார். இருந்தும் அப்போதைய சூழலில் அவர் குறித்த செய்திகள் இப்போது போல சமூக ஊடகங்களின் உதவி இன்றியே காட்டு தீ போல் பரவியது வேறு விஷயம்.

முன்னர் இருந்த தமிழ்நாடு சட்டமன்ற அமர்வும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்.எஸ்.வி.சித்தனும் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகளை வெளியிட அரசாங்கத்தை வற்புறுத்தினார்கள். அதற்கு அப்போதைய நிதியமைச்சர் வி.ஆர்.நெடுஞ்செழியன், ‘முதல்வர் சுவாசக் கோளாறினால் சென்னை பொது மருத்துவமனையில் (இப்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை) சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று கூறியதோடு முதலமைச்சர் தொடர்பான மருத்துவ அறிக்கைகளை தினமும் சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஆளும்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது எம்.ஜி.ஆர். ரத்தப் போக்கினால் அவதிப்பட்டார் என்ற செய்தி முதலில் ஒரு தினசரி நாளிதழில்தான் வெளியானது. தற்போது அரசியல் வாழ்விலிருந்து விலகி வாழும் ஒரு எம்.ஜி.ஆர். விசுவாசி இதுதொடர்பாக பேசும்போது, “அப்போது முதலமைச்சரின் ஆரோக்கியம் எந்த ரகசியத்துக்கும் உட்படுத்தப்படவில்லை. அவர் சம்பந்தமான உணர்ச்சி மிக்க செய்திகள்கூட அத்தனை வெளிப்படை தன்மையுடன் கையாளப்பட்டது” என்று கூறினார்.

விஷயம் அறிந்து 1984, அக்டோபர் 16ஆம் தேதி சென்னைக்கு விரைந்த பிரதமர் இந்திரா காந்தி அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். மத்திய அமைச்சகத்திலிருந்து அனைத்து உதவியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்த இந்திரா, பத்திரிகையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர். ‘புன்னகைத்ததாக’க் கூறினார். மறுநாள் மேலை நாடுகளிலிருந்து மருத்துவ வல்லுநர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து எம்.ஜி.ஆருக்குச் சிகிச்சை அளித்தனர். பத்திரிகையாளர்களிடம் “எம்.ஜி.ஆர். தனது 67ஆவது வயதிலும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக” அறிக்கை வெளியிட்டனர். 1984, அக்டோபர் 20ஆம் தேதி ஜப்பானிலிருந்து வந்த ‘கனு’ என்னும் மருத்துவர் எம்.ஜி.ஆர். மூளையில் வளர்ந்த கட்டியை அகற்றி சிகிச்சை தர வந்தார். இந்த தகவல்கள் மட்டுமின்றி அப்போது நடத்தப்பட்ட சிகிச்சை முறை கூட வெளிப்படையாகப் பகிரப்பட்டது.

எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் ஆளுநர் எஸ்.எல்.குரானா, வி.ஆர்.நெடுஞ்செழியன் அமைச்சகத்தை மேற்பார்வையிடுவார் என அறிவித்தார். அக்டோபர் 20ஆம் தேதி மருத்துவமனையில் திமுக தலைவர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். உடல்நலம் குறித்து விசாரித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அந்த ஒரு மாத காலமும் தமிழகத்தில் ஆட்சி மிகவும் சுமூகமாகவே நடந்தது. பின்னர் நவம்பர் 5ஆம் தேதி புரூக்ளின் மருத்துவமனைக்கு விமானம் மூலம் எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். டிசம்பர் 19ஆம் தேதி அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்கு முன் திருமதி ஜானகி தம் கணவர் குணமடைய அனைவரும் பிரார்த்திக்குமாறு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் எம்.ஜி.ஆர். விரைவில் குணமடைய ரசிகர்களாலும் தொண்டர்களாலும் பிரார்த்தனைகளும் பூஜைகளும் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் மகளான லீலாவதி அவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தார்.

இதற்கிடையில் நாட்டில் பல அசம்பாவிதங்கள் நடந்தேறியது. இந்திரா காந்தி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமர் ஆக்கப்பட்டார். இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை கொஞ்சம் முன்னதாக நடத்த விடுத்த கோரிக்கையை தமிழகம் ஏற்றுக்கொண்டது. எம்.ஜி.ஆர். நியூயார்க் மருத்துவமனையில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதிக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். டிசம்பர் 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 30,000 ஓட்டுகள் பெற்று ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று 1985 பிப்ரவரி 4ஆம் தேதி நாடு திரும்பி, 10ஆம் தேதி மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி பிரமாணம் ஏற்றார். தலைமைச் செயலக அலுவல்களிலேயே ஏறத்தாழ இரண்டாண்டுகள் கழிந்த பின்னர் ஒரு கிறிஸ்துமஸ் மாலையில் இதய நோயால் இயற்கை ஏய்தினார் எம்.ஜி.ஆர்.

முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தபோதும் தனது உடல்நிலை குறித்து தமிழக மக்களுக்கும் தனது அரசியல் குருவான ஈ.வெ.ரா.பெரியாருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் இதுபோன்ற எல்லா இக்கட்டான நேரங்களிலும் முதல்வர்களும் ஆட்சி செய்யும் அமைச்சகமும் வெளிப்படையாகவே இருந்து வந்துள்ளன. நாட்டின் நிலவரமும் சுமூகமாகவே இருந்து வந்துள்ளது. உறவுகள் என்று கூறும் தொண்டர்களின் உணர்வுகளில் இதுவரை ஒருவரும் விளையாடியதில்லை. ஏனெனில் இது விளையாட்டும் இல்லை.

தமிழில்: என்.கிருஷ்ணகாந்த்

நன்றி: http://www.frontline.in/the-nation/when-mgr-fell-ill/article9201689.ece

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon