மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

அப்பல்லோவுக்கு வருகிறார் ரோசய்யா!

அப்பல்லோவுக்கு வருகிறார் ரோசய்யா!

உடல்நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக முன்னாள் கவர்னர் ரோசய்யா இன்று சென்னை வருகிறார். 2011ஆம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் தமிழகத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்டவர் ரோசய்யா. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர்.

2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஒரு சில மாதங்களில் அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழக கவர்னரானார் ரோசய்யா. அன்று முதல் அவர் பதவி விலகிச் செல்லும் வரை ஆட்சித் தலைமைக்கு மிக நெருக்கமானவராகவே நடந்து கொண்டார்.

பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும்போது மாநில கவர்னர்கள் மாற்றப்படுவது மரபு இல்லையென்றாலும், வழக்கம் அதுதான். ஆனால், அந்த வழக்கம் ரோசய்யாவைப் பொருத்தவரை காலாவதியாகிப் போனது. 2014இல் மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தபோது ரோசய்யா மாற்றப்படுவார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அதற்கும் தனது சாதுர்யமான நடத்தையால் செக் வைத்தார் ரோசய்யா. ஒரு மாநிலத்தின் கவர்னரை மாற்றும் முன்னர், அம்மாநில முதல்வரின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்குக் கிடையாது. ஆனால், ரோசய்யாவை மத்திய அரசு மாற்ற நினைத்தபோது அதைத் தடுத்து நிறுத்தினார் ஜெ.

ஜெயலலிதாவின் முழு ஆதரவும் இருந்ததால் ரோசய்யாவின் பதவி அப்போதைக்குத் தப்பியது. முதல்வர் ஜெயலலிதாவின் வார்த்தைகளை ரோசய்யா தட்டியதே இல்லை என்பதுதான் அதன் பின்னணி காரணம்.

அதிமுக ஆட்சி பற்றி திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்டங்களில் கொடுத்த புகார் மனுக்களை அவர் பொருட்படுத்தியதே இல்லை என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு.

பொதுவாக குடியரசு, சுதந்திர தின விழாக்களின்போது முதல்வர், அமைச்சர்களுக்குக் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்தளிப்பது வழக்கம். அத்தகைய சந்தர்ப்பங்களை ஒருமுறைகூட ஜெ புறக்கணித்ததில்லை. கவர்னருடன் பேசும்போது அவரது தாய்மொழியான தெலுங்கில் பேசி அசத்துவது ஜெ-வின் வழக்கம். இப்படி எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், காங்கிரஸ்காரரான தன்னை, பாஜக ஆட்சியிலும் தமிழக கவர்னராக தொடரச்செய்தவர் ஜெ என்பதால் அவர்மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்.

மாநில முதல்வர்கள் கவர்னர் குடும்பத்தினருடன் அதிக நெருக்கம் காட்டமாட்டார்கள். ஆனால், கவர்னர் ரோசய்யா தனது பேத்தியின் திருமண அழைப்பிதழை முதல்வரைச் சந்தித்து கொடுத்தபோது அவரது மனைவி, முதல்வரைக் கட்டிப்பிடித்து வாழ்த்த நெகிழ்ந்து போனார் முதல்வர். இப்படி காலப்பெட்டகத்தில் எத்தனையோ அழியாத ஞாபகங்கள்.

இப்போது ஜெ-வின் உடல்நிலை தெரிந்து வருந்தியவர், அவரைப் பார்ப்பதற்காகச் சென்னைக்கு வருவது நெகிழ்ச்சியின் உச்சம்!

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon