மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

கைதாவாரா அர்ஜுன் சம்பத்?

கைதாவாரா  அர்ஜுன் சம்பத்?

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இருவரும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கியை வைத்து ஆயுத பூஜை போட்ட படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. இதனைப் பார்த்த இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா அப்துல் ரஹீம், நேற்று டி.ஜி.பி. ராஜேந்திரனைச் சந்தித்து, ‘அவர்கள் இருவரும் சட்டத்துக்குப் புறம்பாக எஸ்.எல்.ஆர். துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த துப்பாக்கி எப்படி வந்தது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் கொடுத்திருக்கிறார். அவர், நமது மின்னம்பலம் இணைய இதழ் நிருபரிடம் பேசும்போது, “புகார் கொடுத்துவிட்டு டி.ஜி.பி.யிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், ‘அது போலீஸ் பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கி’ என்று சப்பைக் கட்டு கட்டினார். அதற்கு நான், ‘அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்களும் மேஜை மீது துப்பாக்கி, கத்தி, போன்ற ஆயுதங்களை வைத்துப் படம் எடுத்து வெளியிடுவோம்’ என்று சொன்னேன். அதற்கு டி.ஜி.பி. ‘பொறுமையாக இருங்கள் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறேன். தேவையேற்பட்டால் கைது செய்வோம்’ என்றார்.

போலீஸ் துப்பாக்கியை கீழே வைப்பது பெரும் குற்றம். கிப்ட்டாக வந்தது அது, ஏர்-கன் என்று அறிக்கை விட்டு அர்ஜுன் சம்பத் தப்பிக்கப் பார்க்கிறார். அது உண்மையிலேயே எஸ்.எல்.ஆர். வகை துப்பாக்கிதான் என்பது விபரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும். 1997ஆம் ஆண்டு நடந்த கோவை கலவரத்தில் அர்ஜுன் சம்பத்தைத் திட்டமிட்டு போலீஸ் தப்பிக்க விட்டது. ஆனால், இந்த முறை விடமாட்டோம். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து துப்பாக்கி எங்கிருந்து வந்தது? யாரிடம் வாங்கியது? என்று விசாரிக்க வேண்டும். அதிகார வர்க்கங்களைக் கண்டு போலீஸ் அஞ்சினால், சாமானியனும் கத்தி, துப்பாக்கி வைத்து மிரட்டும் அளவுக்குப் போய், படம் எடுத்து வெளியிடும் நிலை வந்துவிடும்” என்றார் ஆவேசமாக.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon