மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

உ.பி.தேர்தல் - பாஜக-வுக்கு அதிக இடங்கள்: கருத்துக்கணிப்பு!

உ.பி.தேர்தல் - பாஜக-வுக்கு அதிக இடங்கள்: கருத்துக்கணிப்பு!

உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

உத்திரப்பிரதேசம் இந்தியாவிலேயே பெரிய மாநிலம் ஆகும். அங்கு இப்போது அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உத்திரப்பிரதேசம் உட்பட பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் அகாலிதளம் - பாஜக கூட்டாட்சி நடைபெறுகிறது. மணிப்பூர் மற்றும் உத்தரகண்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கோவாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதில் உத்திரப்பிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்காக சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பல கட்டமாக நடைபெறவிருக்கும் உத்திரப்பிரதேசத் தேர்தல் அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாத போதும், தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அப்னா தளம் 2 தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற போதும், காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 224 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 80 தொகுதிகளிலும், பாஜக 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எஞ்சிய தொகுதிகளில் மற்ற கட்சிகளும், சுயேட்சைகளும் வெற்றி பெற்றன. இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பற்றிய கருத்துக்கணிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு 170 முதல் 182 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 115 முதல் 124 இடங்களும், சமாஜ்வாடி கட்சிக்கு 94 முதல்103 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 முதல் 12 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியில் குடும்ப மோதல் வலுத்துள்ளதால் அதன் செல்வாக்கு சரிந்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள 21 சதவிகித தலித்துக்களையும் 19 சதவிகித முஸ்லிம்களையும் குறிவைத்து அதிரடி வியூகம் வகுத்துள்ளார். அக்கட்சி வெற்றி பெற்றால் அவரே முதல்வர் ஆவார். ஆனால், பாஜக சார்பில் இன்னும் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனவே பாஜக-வுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையேதான் பிரதான போட்டி என்று கூறப்படுகிறது.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon