மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 27 மே 2020

பொது சிவில் சட்டம் பற்றி முஸ்லிம் சட்ட வாரியம்!

பொது சிவில் சட்டம் பற்றி முஸ்லிம் சட்ட வாரியம்!

‘பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் கொண்டுவர பாஜக அரசு முயற்சிப்பது ஒரு சமூகத்துக்கு எதிராகத் தொடுக்கப்படும் போர்’ என்று முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் பொது சிவில் சட்டம் குறித்த ஆலோசனைகள் பெறும் மத்திய சட்ட ஆணையத்தின் முயற்சிகளை அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதுகுறித்து புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய பொதுச்செயலர் வாலி ரெஹ்மானி கூறும்போது, “மக்களை ஒரே விதமாக சித்தரிக்க முயலும் இந்த பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்தல்” என்று கண்டித்துள்ளார்.

“பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டுவந்தால் அது அனைவரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்டும் முயற்சியாகும். இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. அதேபோல், மூன்று முறை ‘தலாக்’ கூறும் நடைமுறையை நீக்கவும் நாங்கள் விரும்பவில்லை. பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களைவிட இந்துகளிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன” என்று ஜமையது உலிமா-ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி தெரிவித்தார்.

“சில முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே” என்று செய்தியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியபோது, முஸ்லிம் சட்ட வாரிய பொதுச்செயலர் வாலி ரெஹ்மானி “ஜனநாயகத்தில் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு” என்றார்.

வெள்ளி, 14 அக் 2016

chevronLeft iconமுந்தையது