மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

தமிழக மாணவருக்கு ’இளம் விஞ்ஞானி’ விருது!

தமிழக மாணவருக்கு ’இளம் விஞ்ஞானி’ விருது!

வேலூர் வி.ஐ.டி. பல்கலை மாணவர் ஒருவருக்கு, புதிய ஆன்டிபயாடிக் மருந்தை கண்டுபிடித்ததற்காக ’இளம் விஞ்ஞானி’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருதை அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் அளித்துள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பத்துறையில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காக கடந்த 2009ஆம் ஆண்டில் ‘இன்னோ இண்டிகா அண்ட் இண்டிகோ பாலிசி’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, ‘எப்பி 7’ என்ற இளம் விஞ்ஞானி விருதுக்கான ஆராய்ச்சிப் போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் துருக்கி, நார்வே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து, நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் புதிய ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது, நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு கார்போனியம், கொலிஸ்டின் மற்றும் டைகிசைக்ளின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக, புதிய ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிப் போட்டியில், விஐடி பல்கலை.யில் உயிரி அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவர் பிரசாந்த் மனோகர் பங்கேற்றார்.

மாணவர் பிரசாந்த் மனோகர், கடந்த 2014ஆம் ஆண்டு பேராசிரியர் ரமேஷ் வழிகாட்டுதலுடன் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கினார். அதற்கு ‘பேஜ் தெரப்பி’ என்ற தலைப்பு வைத்தார். புதிய ஆன்டிபயாடிக்குக்கான பாக்டீரியாக்களை உருவாக்கி மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தி வந்தார். ஆராய்ச்சியில் ‘ஆன்டிபயாடிக் ரெஸிஸ்டெண்ட்’ என்ற புதிய மருந்தைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். இவருடைய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை நிபுணர் குழுவினர் பரிசீலனை செய்தனர். இந்தப் போட்டியில் இவருடன் சேர்ந்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா அவிலா, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் சர்க்கார், கான்பூர் ஐஐடி மாணவர் விக்ரம் சோனி, அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் கல்யாண் பாஸ்கர், பெங்களூரு ஐஐஎஸ்சி-யின் ஹரிஹரன் முனிகான்டி ஆகியோரின் ஆராய்ச்சிப் படைப்புகள் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

கோவாவில் இந்தப் போட்டியின் இறுதிக்கட்ட தேர்வுகள் நடைபெற்றன. அதேபோல், சர்வதேச மாநாட்டில் வீடியோ பிரசன்டேஷன், சோசியல் மீடியா விருப்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விஐடி பல்கலைக்கழக மாணவர் பிரசாந்த் மனோகரின் புதிய கண்டுபிடிப்பான ‘பேஜ் தெரப்பி’ முதலிடம் பிடித்தது. இவை அனைத்திலும் முதலிடம் வந்த பிரசாந்த் மனோருக்கு ‘எப்பி 7’ என்ற விருது வழங்கப்பட்டது.

வியாழன், 13 அக் 2016

அடுத்ததுchevronRight icon