மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

வாட்ஸ் அப் பயன்படுத்தினால்...!

வாட்ஸ் அப் பயன்படுத்தினால்...!

குழந்தைகள் முதல் அனைவரும் பயன்படுத்தும் முக்கியமான தொழில்நுட்பமாக மாறிவிட்டது வாட்ஸ் அப். குறிப்பாக, இளைஞர்கள் இரவு, பகல் பார்க்காமல் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. ‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துவதன்மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சிந்தனைத்திறன் பாதிப்புக்குள்ளாவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் பெரி.கபிலன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பேராசிரியர் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் கோம், பிரையன் ஆக்டன் ஆகிய இருவரும் 20 ஆண்டுகளுக்குமுன்பு யாஹூ நிறுவனத்தில் பணிபுரிந்தார்கள். இவர்கள் இருவரையும் ஃபேஸ்புக் நிறுவனம் வேலைக்குச் சேர்க்காத கோபத்தில், கடந்த 2009ஆம் ஆண்டில் ‘வாட்ஸ் அப்’ என்ற பரிமாற்றச் செயலி நிறுவனத்தைத் தொடங்கினர். உலகில் அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தும்வகையில் ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெர்ரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும்வகையில் வாட்ஸ் அப் வடிவமைக்கப்பட்டது.

ஒருவரின் சொந்தத் தகவலை வெளியிடுதல், பதினாறு வயதுக்குள் இருக்கும் சிறார்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தக்கூடாது. இதை மீறினால் ‘வாட்ஸ் அப்’ குழுவில் இருந்து நீக்கலாம் என நிறுவன விதிமுறைகள் இருந்தாலும், அது தடுக்கப்படுவது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. உலகம் முழுவதும் 80 கோடிப் பேர் ‘வாட்ஸ் அப்’ பயன்பாட்டாளர்களாக உள்ளனர். மாதம்தோறும் புதிதாக ஒரு லட்சம் பேர் வாட்ஸ் அப் குரூப்பில் இணைகின்றனர். வாட்ஸ் அப் பயன்படுத்துவோரில் முதல் மூன்று இடங்களில் இந்தியா இருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 1௦௦ பேரை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்ததில் அவர்களில் 6௦ பேர் வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவர்களின் சுயசிந்தனை பாதிக்கிறது. இளைஞர்களிடத்தில் இது போதைபோல மாறிவிட்டது. இரவு-பகல் என்று பாராமல் எல்லா நேரங்களில் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களில் 5௦௦ கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி நிலை பற்றிய ஆய்வில் கல்வி, பொதுத்தகவல், அரட்டை, குடும்பம் போன்ற சில நியாயமான காரணங்களுக்காக பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இதில், அதிகம் அரட்டை அடிப்பதற்காகவே பயன்படுத்துகின்றனர்.

இதுபற்றிய பகுப்பாய்வில், கல்வி 8 சதவிகிதமும் பொதுத் தகவலுக்கு 11 சதவிகிதமும், அரட்டைக்கு 72 சதவிகிதமும், குடும்பத் தகவலுக்கென 9 சதவிகிதமும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். இதில் வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குரூப்பில் அனுப்பும் சில தகவல்கள் மற்றவர்களுக்கு இடையூறாகிறது.

வாட்ஸ்அப் பயன்படுத்தும் மாணவச் சமுதாயம் மனதளவில் பாதிப்புக்குள்ளாகிவருவது தெரிகிறது. எனவே, இதைத்தடுக்க கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களும் வாட்ஸ் அப் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மனித வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும்வகையில் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது தனிமனிதனின் கையில்தான் உள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon