மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

இருவர் கைது - எஸ்.ஆர்.எம். பள்ளியில் மாணவி இறப்பு!

இருவர் கைது - எஸ்.ஆர்.எம். பள்ளியில் மாணவி இறப்பு!

கடந்த 7ஆம் தேதி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக் பள்ளியின் 4வது மாடியிலிருந்து தவறி விழுந்து லோகமித்ரா என்ற 9 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இப்பள்ளி, பள்ளிக் கல்வி இயக்குநகரம் சொல்லும் எந்த வழிகாட்டுதலுக்கும் உட்படாமல், ஐந்து மாடிக் கட்டடத்தில் இயங்குகிறது. இது பள்ளிக்காக கட்டப்பட்ட கட்டடம் அல்ல. அது, மக்கள் குடியிருக்கக் கட்டிய அபார்ட்மெண்ட். அதனால் குழந்தைகள் விளையாட இடவசதி இல்லாத காரணத்தால், ஐந்தாவது மாடியை விளையாடும் இடமாக மாற்றியுள்ளனர். அங்கு விளையாடும்போதுதான் இந்தக் குழந்தை லோகமித்ரா தவறி விழுந்துள்ளார். இதையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த சிறுமியை அருகிலுள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார். ஆனால் மாணவி மதியம் 2.30 மணிக்கு இறந்துவிட்டார். ஆனால் அதை உடனே தெரியப்படுத்தாமல் இரவு எட்டு மணிக்கு சிறுமி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்நிலையில், மாணவி லோகமித்ரா உயிரிழந்தது தொடர்பாக எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக் பள்ளி நிர்வாகம்மீது அசோக்நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304(A)ன் கீழ் (கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்துதல்) வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மாணவி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி முதல்வர் அமல்ராஜ், மேலாளர் பார்த்திபன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பள்ளியில் 2௦௦௦க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அபார்ட்மெண்டில் செயல்படும் பள்ளியை இடம் மாற்ற வேண்டும் என்பது அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை. மேலும் இந்தச் சம்பவம் நடந்து ஒரு வார காலமாகியும் இதுவரை பள்ளிக் கல்வித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon