சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி மூன்று கல்லூரி மாணவிகள் பலியாகினர். மேலும் மூன்று மாணவிகள் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி மேம்பாலம் அருகே செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளது. இன்று, கல்லூரி முடிவடைந்ததும் சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகளும் வீட்டுக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி மாணவிகள்மீது மோதியது. மோதிய இடத்திலேயே அம் மாணவிகள் இறந்தனர். மேலும் மூன்று மாணவிகள் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் லாரி வேகமாக வந்ததுதான் விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. விபத்து நடந்ததையடுத்து, லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். லாரியின் பிரேக் வேலைசெய்யாத காரணத்தால் விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலம் முதல் சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 69,059 விபத்துகள் நடந்துள்ளன என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2015 ஆண்டில், 5,01,423 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக, ஒரு நாளைக்கு 1,374 விபத்துகள். இவ்விபத்துகளால் நாள்தோறும் 400 பேர் பலியாகின்றனர். சராசரியாக, ஒரு மணி நேரத்தில் 57 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. பலியானவர்களில் 54% பேர் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள். 77% விபத்துகளுக்கு ஓட்டுநர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டுவதே காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.