மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா இரண்டாவது இடம்!

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா இரண்டாவது இடம்!

இந்தியா அறிவியல் ஆராய்ச்சியில் முன்னணி வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, வேதியியல் ஆராய்ச்சிகளில் 51 சதவிகிதத்துக்கு அதிகமான அறிவியல் பங்களிப்புகளை 2015ஆம் ஆண்டு இந்தியா செய்துள்ளது. மேலும் 36 சதவிகிதம் இயற்பியலிலும், 9 சதவிகிதம் வாழ்க்கை சார்ந்த அறிவியலிலும், 4 சதவிகிதம் பூமி மற்றும் சுற்றுப்புற அறிவியலிலும் ஆராய்ச்சிகளை செய்துள்ளது. உயர்தர அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த பல ஆராய்ச்சி நிறுவனங்கள் இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அதுவும் உலகளவில் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் முதல் 100 இடங்களைப் பிடித்த நிறுவனங்களுள் கவுன்சில் ஆப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்டிரியல் ஆராய்ச்சிக் கழகம், இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச், இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னலாஜி ஆகிய நிறுவனங்கள் முக்கிய ஆராய்ச்சிகளை நடத்துகின்றன.

சீனாவில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உலகளவில் அதிக அறிவியல் ஆராய்ச்சிகளை செய்துள்ளது என ’நேச்சர் இன்டக்ஸ் (Nature index) பட்டியலிட்டுள்ளது. சிறந்த 100 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களில் 40 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவையாக உள்ளன.

அமெரிக்காதான் உலகில் அதிகளவிலான அறிவியல் ஆராய்ச்சி ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கும் முதலிடமும் வகிக்கிறது. அமெரிக்காவின் புதிய 11 அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும், உலகளவிலான 100 இடங்களுக்குள் இடம்பெறுகிறது. மேலும் 9 இங்கிலாந்து நிறுவனங்களும், 7 ஜெர்மன் நிறுவனங்களும், 5 இந்திய நிறுவனங்களும் புதிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களாக உள்ளன.

’ரைசிங் ஸ்டார்’ என்னும் ஆய்விதழின் பட்டியலின்படி, உலகம் முழுவதும் 8000 அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. மேலும் 68 ஆய்விதழ்களில் இந்தக் கட்டுரைகள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. அதில் வேதியியல் துறையில் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்தியா மட்டுமே அளித்துள்ளது. இதில், 51 சதவிகிதம் வேதியியல் துறையிலும், 36 சதவிகிதம் இயற்பியல் துறையிலும், வாழ்க்கை அறிவியலில் 9 சதவிகிதமும், 4 சதவிகிதம் பூமி மற்றும் சுற்றுப்புறச் சூழல் அறிவியலிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்தியா அளித்துள்ளது.

'இந்தியாவின் பொருளாதாரத் தேவைகள் பெருகி வருவது, பல உயர்தர அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு, எண்ணிக்கையைப் பெருக்கியிருப்பதில் இருந்தே தெரிகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியலை தீவிரமாக சொல்லித் தர வேண்டும்' என்கிறார் ஸ்பிரிங்கர் நேச்சர் இதழின் முதன்மை செயல் அலுவலர் தேர்க் ஹாங்.

ஆனால் இதற்குமுன் வந்துள்ள தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கையின்படி, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளில் 3 சதவிகிதம் பேர் மட்டுமே எதிர்காலத்தில் அறிவியல் துறையில் வேலைபார்க்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon