மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 ஜன 2021

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

திமுக - காங்கிரஸ்  கூட்டணியில் விரிசலா?வெற்றிநடை போடும் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கட்சியினரிடம் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். அப்போது திமுக-வுடன் கூட்டணி வேண்டாம் என பெரும்பாலான மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் மாநிலத்திலும் மத்தியிலும் திமுக-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. தொகுதிகளின் எண்ணிக்கையில் பிரச்னை வரும்போதெல்லாம் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் தலையிட்டு நிலைமையைச் சமாளிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிக சீட்டுகளை காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் 41 சீட்டுகளை மட்டுமே திமுக ஒதுக்கியது. அவற்றில் 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸுக்கு வெற்றி. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வர வழக்கம்போல் அதிக சீட்டுகளை எதிர்பார்த்திருந்த காங்கிரஸுக்கு ’பெப்பே’ காட்டியது திமுக. மாவட்ட அளவில் இடஒதுக்கீட்டைப் பற்றி பேசி முடிவு செய்யட்டும் என திமுக மேலிடம் தெரிவித்தது.

இதற்கிடையே, தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்த கருத்திலும், தமிழகத்தில் பொறுப்பு முதல்வர் குறித்த கருத்திலும் திமுக-வின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். இது, கூட்டணியில் ஆரம்ப விரிசலுக்கு வித்திட்டது. தொடர்ந்து ’தேர்தல் கூட்டணி ஆயுட்கால கூட்டணி அல்ல’ என்ற அவரது பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது.

இந்நிலையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தை சென்னையில் கூட்டினார் திருநாவுக்கரசர். அப்போது அதிக சீட் கிடைக்கவில்லையென்றால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. திமுக-வினருடன் கூட்டணி குறித்துப் பேசியபோது அவமானம் அடைந்ததாக சில தலைவர்கள் சொல்ல, கூட்டத்தில் சலசலப்பு. அப்போது ’திமுக கூட்டணி வேண்டாம் என்பவர்கள் கை தூக்குங்கள்’ என்று திருநாவுக்கரசர் சொல்ல, 61 மாவட்டத் தலைவர்களில் 25 பேர் கையை உயர்த்தியிருக்கிறார்கள். மற்றவர்கள் கூட்டணி வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ சொல்லவில்லை. இருந்தாலும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அவசியம். இல்லையேல் சாதிக்க முடியாது என்றிருக்கிறார்கள்.

‘சட்டமன்றத் தேர்தல் கூட்டணியின்போது கலைஞர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இப்போது ஸ்டாலின் நடத்துகிறார். இருவருக்குமிடையே அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கு. உள்ளாட்சியில் 25 ஆயிரம் இடங்களில் 2 ஆயிரம் இடங்கள் மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருக்கு. இது ரொம்பவும் குறைவு. சதவிகித அடிப்படையில் சீட் ஒதுக்க வாய்ப்பில்லைன்னு திமுக-வில் சொல்றாங்க. இதனால் குக்கிராமாங்களில் கட்சியை வளர்க்க முடியாது. இப்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கு. அடுத்த அறிவிப்பு வரும்போது பார்த்துக்கலாம். இதுகுறித்து நான் ராகுல்காந்தியிடம் பேசுகிறேன்” என்று சொல்லி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

இதற்கிடையே ’உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டிடும் வாய்ப்பில்லை. அந்தப் பேச்சுகள் ஆதாரமற்றவை!’ எனச் சொல்லியிருக்கிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையுமா?

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon