மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

அதிவேக ரயில்: இந்தியா - ஜெர்மனி ஒப்பந்தம்!

அதிவேக ரயில்: இந்தியா - ஜெர்மனி ஒப்பந்தம்!

இந்தியாவில் அதிவேக ரயில் திட்டத்தைச் செயல்படுத்த ஜெர்மனியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும்விதமாகவும், பயண நேரத்தை குறைக்கும்விதமாகவும் அதிவேக ரயில் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே, மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் டால்கோ ரயில் பல்வேறு கட்டங்களாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த டால்கோ ரயில் திட்டம் ஜப்பான் நாட்டால் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் நான்கு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

அவர் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவைச் சந்தித்து, ரயில்வே துறையை மேம்படுத்தும் விதமாக அதிவேக ரயில் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இக்கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையேயான அதிவேக ரயில் மற்றும் இந்திய ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014இல் அதிவேக ரயில் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் வழங்கியது. இதன் முதற்கட்டமாக, டெல்லி ஆக்ரா இடையே மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய கடிமான் எக்ஸ்பிரஸ் என்ற மிதவேக ரயில் இந்தாண்டு ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுதவிர, சென்னை - ஹைதராபாத், டெல்லி - சண்டிகர், டெல்லி கான்பூர், மும்பை - அகமதாபாத், மும்பை - கோவா, மைசூரு - பெங்களூரு - சென்னை, நாக்பூர் - ராய்ப்பூர் - பிலாஸ்பூர், நாக்பூர் - செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களுக்கிடையே மிதவேக ரயில்களை இயக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon