மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் தமிழகம் முன்னணி!

தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் தமிழகம் முன்னணி!

இந்தியா முழுவதும் நடைபெறும் குற்றங்கள் குறித்து ஆண்டறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி) ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதில் பெண்கள், குழந்தைகள், தலித் மக்கள் மீதான வன்முறைகள் குறித்து மாநில வாரியான புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த குற்றச்செயல்களில் தாழ்த்தப்பட்டோர் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த வன்முறை சம்பவங்களில் மொத்தம் 729 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் 208 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 82 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். பீகாரில் 80 தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் 50 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வன்முறைச் சம்பவங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கொல்லப்பட்ட எண்ணிக்கையில் தமிழகம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 43 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதற்கான வழக்குகள் பதிவாகியிருக்கிறது என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு 47,064 ஆக இருந்த தாக்குதல்கள், 2015ஆம் ஆண்டு 45,003 ஆக குறைந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான வன்முறைகளின் அளவு உயர்ந்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு 33 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால், 2015ஆம் ஆண்டு 43 பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். 2014ஆம் ஆண்டைவிட 2015ஆம் ஆண்டு நான்கு மடங்கு பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 39 கலவரங்கள் நடந்தன. 2015ஆம் ஆண்டில் அது 185 ஆக உயர்ந்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கிராமங்களைச் சூறையாடும் சம்பவங்கள் 14 நடந்துள்ளன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் தாக்கப்படுவதில் இந்திய அளவில் உத்திப்பிரதேசத்துக்கு அடுத்து இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் முதலான சிறப்புச் சட்டங்களின்கீழ் அல்லாமல் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள குற்றங்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் தலித்துகள் மீதான வன்முறை தொடர்பாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் 388 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2015ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 1198ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon