மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஏப் 2020

சளி பிடித்தால் மாத்திரை அவசியமா?

சளி பிடித்தால் மாத்திரை அவசியமா?

ஜலதோஷம் பிடிப்பது ஒருவகையில் நல்லதுதான். உடலில் தேவையில்லாமல் சேரும் மாசுக்களையும், வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளையும் வெளியேற்றுவதற்கு ஜலதோஷம் பயன்படுகிறது. பெரியவர்களுக்கு ஜலதோஷம் வந்தால், குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், சிலர் லேசாக சளி பிடித்தவுடனேயே மருந்துக்கடைக்குப் போய், அவர்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிடுவார்கள். இது தவறான நடைமுறை. அப்படி சாப்பிடுபவர்களின் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தி பாதிக்கப்படும்.

மூன்று நாட்களுக்கு மேலாக ஒருவருக்கு தும்மல் இருந்தாலோ, சளியின் நிறம் மாறினாலோ அல்லது சளியில் துர்நாற்றம் வீசினாலோ அவசியம் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசுகேடாக இருந்தால்கூட, அலர்ஜி காரணமாக தும்மல், இருமல் போன்றவை வரலாம். ஏசியில் அதிகமாக இருப்பவர்களுக்கும் ஜலதோஷம் பிடிக்கும். ஜலதோஷம் வந்தால் ஓய்வு எடுப்பது அவசியம். அதே பிரச்னையுடன் சிலர் வேலைக்குப் போவார்கள். அவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் மற்றவர்களுக்கும் பரவிவிடும். மேலும், குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் கூட்டிப்போவது நல்லது. ஜலதோஷத்துடன் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பக்கூடாது. குளிர்காலத்தில் வைரஸ் கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு வேகமாக பரவும்.

இதுபோன்ற நோய்கள் பரவும் காலங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் கைகளை ஆன்டிசெப்டிக் திரவம் கொண்டு சுத்தமாக கழுவச் சொல்வதும் அவசியம். சிலருக்கு அடிக்கடி சளி பிடிப்பது மரபு வழியாக வரும். இவர்கள் தேவைக்கு ஏற்ப மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தூசிகள் இல்லாமல் வீட்டைச் சுத்தமாக பராமரிப்பது அவசியம்.

இயற்கையான எதிர்ப்புச்சக்தியை உடலில் உருவாக்கிக் கொண்டால் எந்த நோயும் வராமல் காக்கலாம். அதற்கு சமச்சீர் உணவு அவசியம். நோய் எதிர்ப்புச்சக்திக்கு வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். அதற்குப் பதிலாக கொய்யா, நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே வைட்டமின் சி-யைப் பெறலாம். சுக்கு, சீரகம், துளசி கலந்த நீரை சுட வைத்துக் குடித்தால் இயல்பாகவே எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். தூதுவளையை உணவில் சேர்த்துக்கொண்டால் சளிப் பிடிப்பது குறையும். உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டாலே எந்த மாத்திரைகளும் தேவையில்லை.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon