மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சாத்தூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் ஒன்பது பேர் கைது!

சாத்தூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் ஒன்பது பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசுப் பேருந்தில் பயணித்த ஒருவரை இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அரசு பேருந்தில் மதுரையை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து சாத்தூர் அருகே சென்றபோது கருப்பசாமிக்கும் பேருந்தில் இருந்த இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அந்த மர்ம நபர்கள் கருப்புசாமியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து, அருகில் இருந்த பொதுமக்கள் சாத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கருப்பசாமியின் உடலை கைப்பற்றினர். பின் மர்ம நபர்களை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பம்மல் பாலசுந்தரம், ஒட்டபிடாரம் திருமணி உள்ளிட்ட ஒன்பது பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 2ஆம் தேதி கோவில்பட்டியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் கருப்புசாமியின் சகோதரர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதற்கு பழி தீர்க்கவே இந்த கொலை நிகழ்த்தப்பட்டிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. கருப்பசாமி கொலை வழக்கில் அப்துல்லாவின் தந்தை ரபீக் என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். எனவே ரபீக்கை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மாமல்லபுரம் அருகில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காமேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். கடந்த மே மாதம் சென்னையில் டிராவல்ஸ் அதிபர் பாபுசிங் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழகத்தில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் காட்டுவதாக உள்ளது. ஆனால் கள்ளத் துப்பாக்கிச் சந்தையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon