மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

திருப்புவனம்: இந்துக்கள் கொண்டாடிய முகரம்

திருப்புவனம்: இந்துக்கள் கொண்டாடிய முகரம்

முகரம் பண்டிகையையொட்டி, திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் இந்துக்கள் முகரம் பண்டிகை கொண்டாடிய வினோத திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்புவனம் ஒன்றியத்துகுட்பட்டது முதுவன்திடல் கிராமம். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிகமாக வாழந்து வந்தனர். அந்த கால கட்டத்தில் பாத்திமா நாச்சியார் என்ற பெண்ணும் வாழ்ந்து வந்தார். இவர் அந்த கிராமத்தில் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார். பாத்திமா நாச்சியார் இறந்த பின்னர் அவரது நினைவாக முதுவன்திடல் கிராமத்தில் உள்ள மைய பகுதியில் பள்ளி வாசல் மற்றும் தர்கா அமைக்கப்பட்டது. மேலும் அவரை தெய்வமாக வழிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு காலப்போக்கில் இங்கு வசித்த முஸ்லிம்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். தற்போது இந்த கிராமத்தில் இந்து மக்களே ஏராளமாக வசித்து வருகின்றனர். ஆனாலும் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையன்று பாத்திமா நாச்சியார் நினைவாக இங்கு வசிக்கும் இந்துக்கள் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த கிராமமக்கள் விவசாயத்தின்போது முதலாவது நாள் அறுவடை செய்த நெல்லை பாத்திமா நாச்சியார்க்கு படைப்பதையும், முகரம் பண்டிகையின்போது திருமணம், குழந்தை வரம், நோய் தீர்தல் போன்றவைகளுக்காக நேர்த்திக்கடன் செலுத்திவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 3ஆம் தேதி முகரம் முதல் நாள் அன்று தொடங்கியது. திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், 5ஆம் நாள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 7ஆம் நாள் அன்று தர்காவில் இருந்து சப்பர பவனி நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10ஆம் நாளான நேற்று அதிகாலை முகரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி 10 அடி நீளமும், 4 அடி ஆழத்துக்கு பூக்குழி அமைக்கப்பட்டது. இதில் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் விறகு கட்டைகள் போட்டு தீ மூட்டினர். இதனையடுத்து காப்பு கட்டிய பக்தர்கள் ஊர்வலமாக வந்து அதிகாலை நான்கு மணிக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதையடுத்து பூ மொழுகுதல் என்ற தீ கங்கு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் தலையில் துணியை அணிந்தவாறு பூக்குழி முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தலையில் ஈர துணியை கொண்டு போர்த்தினர். அதன்பின்னர் பூக்குழியில் இருந்து தீ கங்குகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்களின் தலை மீது மூன்று முறை போடப்பட்டது. இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை இளைஞர்கள் மேளம் தாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கிச் சென்று மீண்டும் தர்காவுக்கு கொண்டு வந்தனர்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon