மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு உலக வங்கி பதவி கிடைக்குமா?

அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு உலக வங்கி பதவி கிடைக்குமா?

உலக வங்கியின் உயர்நிலை பதவிக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அருந்ததி பட்டாச்சார்யா ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவராக பதவி வகித்து வருகிறார். 1977ஆம் ஆண்டு புரபேஷனரி அதிகாரியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிக்குச் சேர்ந்தார். ஸ்டேட் வங்கி மொபைல் வாலட், ஸ்மார்ட்போன் மூலமான சில்லரை வர்த்தக வங்கிச் சேவைகள் என பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளார். இவர் பொறுப்புக்கு வந்த பிறகு வங்கி கிளைகளை 17,000 ஆக அதிகரித்துள்ளார். 36 நாடுகளில் 33 கோடி மக்களுக்கு வங்கிச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளார். வங்கியின் 207 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பொறுப்பேற்றது இதுவே முதன்முறை.

இந்நிலையில், உலக வங்கியில் காலியாக உள்ள மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு அருந்ததி பட்டாச்சார்யாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகின்றன. 2016ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் தரவரிசைப் பட்டியலில் பட்டாச்சார்யா 25ஆவது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. மேலும், 200 ஆண்டுகள் பழமையான வங்கி நடைமுறைகளில் பட்டாச்சார்யா தொழில்நுட்பத்தை கொண்டு வந்தவர் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது. கடந்த ஜுன் மாதம், ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் ரகுராம்ராஜன் இரண்டாவது முறையாக பதவி வகிக்கப் போவதில்லை என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு அருந்ததி பட்டாச்சார்யா உட்பட ஏழு பேர் பரிந்துரைக்கப்பட்டனர். பின்னர், துணை கவர்னராக இருந்த உர்ஜித் படேல், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon