மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

அரசு போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை!

அரசு போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை!

ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உள்ள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 29ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. எனவே தீபாவளியை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளமுன் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில்கள், பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் போன்றவற்றில் முன்பதிவு முடிந்துவிட்டது. மேலும், 29, 30, 31 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் முன்பதிவும் முடிந்து விட்டது.

இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்தது. கூட்ட நெரிசலைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்துத்துறை இந்த ஏற்பாட்டை மேற்கொண்டது. தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள் உட்பட முக்கிய ஊர்களுக்கு இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், 26ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வெளி மாநிலங்களில் இருந்து 12,000 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

எனவே பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், கண்காணிப்பாளர்கள், கிளை உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்கள் ஆகியோருக்கு விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது விடுப்பில் சென்றுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், மக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் எளிதாக பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon