மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

கடனிலிருந்து மீளுமா ஏர்டெல்?

கடனிலிருந்து மீளுமா ஏர்டெல்?

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கடன், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் செலவிட்ட தொகையால் ரூ.13,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளதாக மூடீஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 257 மில்லியன் சந்தாதாரர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக பார்தி ஏர்டெல் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சுமார் 173.8 மெகா ஹெர்ட்ஸ் அளவிலான அலைக்கற்றைகளை ரூ.14,244 கோடிக்கு வாங்கியது. இதில் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளுக்கு அத்தியாவசியமான 1,800 மெகா ஹெர்ட்ஸ், 2,100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2,300 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை வாங்கியுள்ளது.

இதுகுறித்து மூடீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனாலிசா டிசியரா கூறுகையில், “பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஏலத்தை தொடர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. ஆனால், அடுத்த 6 முதல் 12 மாதங்களில் இந்தக் கடன் சுமை குறைக்கப்படும். ஏனெனில் ஏர்டெல் நிறுவனத்துக்கு செயல்பாட்டு வருவாய் அதிகமாக கிடைப்பதால் கடன் சுமை குறைந்துவிடும். அதாவது, அடுத்த 12 மாதங்களுக்குள் கடன் தொகையில் ரூ.7,100 கோடி குறைக்கப்படும் என்று கணித்துள்ளோம். பங்குச் சந்தையில் பார்தி இன்ஃப்ராடெல்லில் 72 சதவிகிதப் பங்குகளை பார்தி ஏர்டெல் கொண்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.50,200 கோடியாகும். எனவே ஏர்டெல் நிறுவனத்தின் கடன் சுமை குறைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon