மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

வெங்காயம் விலை வீழ்ச்சி!

வெங்காயம் விலை வீழ்ச்சி!

தீபாவளி நெருங்கும் நிலையில், வெங்காயம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, குஜராத், ஆந்திரா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வெங்காயம் ஏற்றுமதி பெரிய அளவுக்கு இல்லை. கடந்த ஆண்டு உற்பத்தியான வெங்காயம் பல டன்கள் தேக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில், வெங்காயம் அறுவடை தொடங்கியுள்ளது. இதனால், வெங்காயம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மார்க்கெட்களுக்கு நாள்தோறும், 100 லாரிகளில் வெங்காயம் வருகிறது. இவை மொத்த விலையில், கிலோ ரூபாய் ஐந்துக்கும், சில்லரை விலையில் கிலோ ரூபாய் ஏழு முதல் எட்டுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தில், வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.100 ஆக விற்பனை செய்யப்பட்டது. டெல்லியில் கடந்த 2014இல் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன் குடியரசுத் தலைவர் ஆட்சி நிலவியபோது, வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100-ஐ தொட்டது. இதை சமாளிக்க 200 முக்கிய இடங்களில் வேன்களில் வைத்து வெங்காயம் விற்க துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவிட்டிருந்தார். இதற்கு முன் 2008இல் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் வெங்காயத்தின் விலை ரூ.100 வரை உயர்ந்தது. வெங்காயத்தை கோர்த்து மாலையாக அணிந்து எதிர்க்கட்சிகள் அப்போது தீவிரப் பிரச்சாரம் செய்தன. அப்போது ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு வேன்களில் வெங்காயம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon