மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

தொடர் விடுமுறை: ரூ.400 கோடிக்கு விற்பனையான மது!

தொடர் விடுமுறை: ரூ.400 கோடிக்கு விற்பனையான மது!

தமிழகத்தில் 6,323 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இதன் மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.65 கோடி முதல் 70 கோடிவரை விற்பனை நடைபெற்று வருகிறது. விடுமுறை நாட்களில் சுமார் ரூ.80 முதல் 90 கோடிவரை விற்பனை இருக்கும். பண்டிகை கால விடுமுறையில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.110 கோடி முதல் 140 கோடி வரை விற்பனையாகும் என தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களில் ரூ.400 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 10ஆம் தேதி ஆயுதபூஜை, 11ஆம் தேதி விஜயதசமி, 13ஆம் தேதி முகரம் ஆகிய மூன்று நாட்களுடன், சனி மற்றும் ஞாயிறு 8 மற்றும் 9ஆம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையும், தனியார் நிறுவனங்களுக்கு ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் விடுமுறை கொண்டாட்டம் களைகட்டியது. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன.

சாதாரண நாட்களை விட கடந்த ஞாயிறன்று ரூ.90 கோடியும், ஆயுதபூஜை அன்று ரூ.120 கோடியும், விஜயதசமியன்று சுமார் ரூ.100 கோடியும், மொஹரம் அன்று சுமார் ரூ.90 கோடியும் விற்பனையாகியுள்ளது. ஆயுதபூஜை விடுமுறையில் நான்கு நாட்களில் மட்டும் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை நடந்துள்ளது” என்றனர்.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி சமயங்களில் உச்சத்தைத்தொடும் மதுபான விற்பனை இந்தமுறை ஆயுதபூஜையிலும் வசூல் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon