மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

மாணவர்களின் விவரங்கள் கணினியில் பதிவு - கல்வித் துறை!

மாணவர்களின் விவரங்கள் கணினியில் பதிவு - கல்வித் துறை!

அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தசரா விடுமுறைக்கு பிறகு, இன்றிலிருந்து பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத்துறை இறங்கியுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவியர் பற்றிய விவரங்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்துள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும். பின்னர் மாணவர்கள் கொடுத்த தகவல்கள் சரியாக உள்ளதா என்று தலைமை ஆசிரியர்கள் சரி பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு அந்த விவரங்களை பள்ளியில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் தயாரிக்கப்படும் இந்த பட்டியல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். டிசம்பர் மாதம் சென்னையில் நடக்க இருக்கும் தேர்வு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மேற்கண்ட பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதற்கு பிறகே தேர்வுத்துறை அந்த பட்டியல்களை சரிபார்க்கும். அதில் சந்தேகம் இருந்தால் அவற்றை திருத்த வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் செய்முறைத் தேர்வுக்குரிய மாணவ, மாணவியர் விவரங்களும் தனியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் அனைத்து பள்ளியிலும் பிளஸ்-2 மாணவ, மாணவியர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon