மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

சென்னையைக் கலங்கடிக்கும் கள்ள நோட்டு புழக்கம்!

சென்னையைக் கலங்கடிக்கும் கள்ள நோட்டு புழக்கம்!

மின்னம்பலம்

சென்னையில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. நேற்று ஆலந்தூரில் காய்கறி விற்ற பெண்ணிடம், ரூபாய் 1000 கள்ள நோட்டை மாற்ற முயன்ற மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கரிபுல்லா (40) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் தள்ளுவண்டியில், காய்கறி வியாபாரம் செய்து வரும் பெண்ணிடம் கடையில் இருந்த காய்கறிகளை வாங்கி கொண்டு, அதற்கான பணமாக ரூ.1000 நோட்டை கொடுத்துள்ளார். அப்போது, அது கள்ள நோட்டு என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள், அவரை விரட்டி சென்று பிடித்து, பரங்கிமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் கரிபுல்லா, மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். சென்னையில் மெட்ரோ ரயிலில் அவருடைய உறவினர் அப்துல் வகாப் என்பவர் வேலை செய்கிறார். அவருடன் அதே வீட்டில் கரிபுல்லா வசித்து வருகிறார். கொல்கத்தாவில் செரீப் என்பவர், ரூபாய் 1000 கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டால் ரூபாய் 300 கமிஷனாக தருவதாகக் கூறியுள்ளார். அதற்காக கரிபுல்லா ரூபாய் மூன்று லட்சத்தை மேற்கு வங்கத்திலிருந்து வாங்கி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, சுமார் ரூபாய் ஆயிரம் கள்ள நோட்டுகள் 196 மற்றும் 91,700 நல்ல ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு தங்கியிருந்த அப்துல் வகாபையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கள்ள நோட்டு சம்பவம் தொடர்பாக வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் முன்னேறி வருகின்ற நகரங்களில் சென்னையும் ஒன்று. சென்னை வர்த்தக நகரம் மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்ற நகரம். மேலும், வட மாநில மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இது தவிர பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வேலை இல்லாத இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். மெட்ரோ ரயில் பணியில் அவர்களுக்கு மாதம் ரூபாய் 15,000 முதல் 20,000 வரை கிடைக்கிறது.

இது தவிர ஹோட்டல்கள், கட்டட வேலைகளில் என பல்வேறு இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காகவும் சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றனர். அதுபோல் வரும் இளைஞர்கள் தலைமறைவாக வசித்து வருகின்றனர். சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட கள்ளநோட்டு வியாபாரிகள் இது போன்ற இளைஞர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டு இதுபோல் அதிக அளவில் கள்ள நோட்டுகள் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு பீகார், மேற்கு வங்காளம் வழியாக இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு புழக்கத்தில் விடப்பட்டது.

இதற்காக ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து வேலை இல்லா இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டனர். சென்னையில் இதுபோன்று புழக்கத்தில் விட்ட பல இளைஞர்கள் சிக்கினர். இவர்களது வேலை, கள்ள நோட்டுகளை சென்னைக்கு கொண்டு வந்து இங்கு தங்கி வெளியில் ஏதாவது பொருட்கள வாங்குவது போல் சில்லறையாக மாற்றுவது மட்டுமே. அப்படி மாற்றி மொத்த பணமும் புழக்கத்துக்குப் போன பின்னர் இவர்கள் ரயில் ஏறி ஊருக்குச் சென்று விடுவார்கள்.

ஆயிரக்கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வேலை தேடி வருவதுபோல் இளைஞர்கள் சென்னைக்குக் கொண்டு வருவதாக விசாரணையில் தெரியவந்தது. அப்போது தீவிர நடவடிக்கையால் அந்த சம்பவம் குறைந்தது. இப்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் திட்டத்தோடு, பாகிஸ்தானில் இருந்து ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள, ரூபாய் 1000 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, 2AQ மற்றும் 8AC ஆகிய இரு சீரியஸில் தொடங்கும் எண்கள் கொண்ட ரூபாய் 1000 நோட்டுக்களை தவிர்க்க வேண்டும் என ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon